ஜம்மு: 90 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று (செப்.18) காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த நிலையில், அங்கு கடும் குளிர் நிலவுவதால், காலை 9 மணி நிலவரப்படி 11.11 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியது. இதனையடுத்து, காலை 11 மணி நிலவரப்படி 26.72 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
இறுதியாக கடந்த 2014ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற நிலையில், தற்போது 10 வருடங்களுக்குப் பிறகு தேர்தல் நடைபெறுகிறது. அது மட்டுமல்லாமல், ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு நடைபெறும் முதல் சட்டமன்றத் தேர்தல் ஆகும்.
#WATCH | Jammu and Kashmir: Voting underway for the 1st phase of Assembly elections; visuals from a polling station in Jagti under Kulgam Assembly Constituency. pic.twitter.com/nvCZhAlys5
— ANI (@ANI) September 18, 2024
இவ்வாறு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெறும் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு 24 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெறுகிறது. இதில், புல்வாமா மாவட்டத்தின் 4 சட்டமன்றத் தொகுதிகள், ஷோபியனில் 2, குல்காம் மாவட்டத்தில் 3, அனந்த்நாக் மாவட்டத்தில் 7, கிஷ்ட்வார் மாவட்டத்தில் 3, தோடாவில் 3 மற்றும் ராம்பன் மற்றும் பானிஹல் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இவற்றில் 16 சட்டமன்றத் தொகுதிகள் காஷ்மீரிலும், 8 சட்டமன்றத் தொகுதிகள் ஜம்முவிலும் உள்ளன.
இந்த முதற்கட்ட வாக்குப்பதிவுக்கான அரசியல் கட்சிகளின் சூறாவளிப் பிரச்சாரம் திங்கள்கிழமை நிறைவு பெற்றது. இதனையடுத்து, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் செய்துள்ளதாக ஜம்மு காஷ்மீர் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். இன்று நடைபெறும் வாக்குப்பதிவிற்காக 24 சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தம் 3 ஆயிரத்து 276 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: தொடர் அச்சுறுத்தல்.. முழுகட்ட பாதுகாப்பு.. ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் ஒரு பார்வை!
இதில் 23.27 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவற்றில் 1.23 லட்சம் முதல்முறை வாக்காளர்கள் மற்றும் 5.66 லட்சம் இளம் வாக்காளர்கள் உள்ளனர். இந்த நிலையில், இதற்கான சோதனை வாக்குப்பதிவு நிறைவுற்று, தற்போது வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் வாக்காளர்கள் பலரும் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
மேலும், ஜம்மு காஷ்மீர் மாநில சட்டமன்றத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு செப்டம்பர் 25 மற்றும் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 1 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. மேலும், இதற்கான வேட்புமனு தாக்கல் முறையே ஆகஸ்ட் 29 மற்றும் செப்டம்பர் 5 ஆகிய நாட்களில் நிறைவு பெற்றது. அதேநேரம், ஜம்மு காஷ்மீரில் 74 பொதுத் தொகுதிகள், 9 எஸ்டி மற்றும் 7 தனித் தொகுதிகள் உள்ளன.