ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று(செப்.25) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. பின்னர் 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவானது. மொத்தமாக 57.03% வாக்குப்பதிவாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
26 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 239 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவல் படி, மொத்தம் 3,502 வாக்குச்சாவடிகள் நிறுவப்பட்டது. அவற்றில் 1,056 நகர்ப்புற வாக்குச்சாவடிகள், 2,446 கிராமப்புற வாக்குச்சாவடிகள் ஆகும். இந்த வாக்குச் சாவடிகள் அனைத்திலும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக இணையவழியில் (வெப்காஸ்டிங்) கண்காணிக்கப்பட்டது.
இத்தேர்தலில் வழக்கமான வாக்குச் சாவடிகள் தவிர, முழுவதும் பெண்கள் மட்டுமே பணிபுரியும் வாக்குச் சாவடிகள் (இளஞ்சிவப்பு வாக்குச் சாவடிகள்) - 26, மாற்றுத்திறனாளிகள் மட்டுமே பணிபுரியும் வாக்குச் சாவடிகள் - 26, இளைஞர்கள் மட்டும் பணிபுரியும் வாக்குச் சாவடிகள் - 26, எல்லை வாக்குச் சாவடிகள் - 26, பசுமை வாக்குச் சாவடிகள் - 26 மற்றும் தனித்துவமான வாக்குச் சாவடிகள்- 22 என மொத்தம் 157 சிறப்பு வாக்குச் சாவடிகளை தேர்தல் ஆணையம் அமைத்தது.
இதையும் படிங்க: திருப்பதி லட்டு சர்ச்சை; புரி ஜெகந்நாதர் கோயிலில் நெய்யை பரிசோதிக்க நடவடிக்கை!
இரண்டாம் கட்ட தேர்தலில் மாநில முன்னாள் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா (கந்தர்பால் தொகுதி), ஜம்மு - காஷ்மீர் பிரதேச காங்கிரஸ் கமிட்டி (ஜேகேபிசிசி) தலைவர் தாரிக் ஹமீத் கர்ரா (சென்ட்ரல் ஷால்டெங் தொகுதி), மற்றும் பாஜக மாநிலத் தலைவர் ரவீந்தர் ரெய்னா (நவ்ஷேரா தொகுதி) ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.
உபா சட்டத்தில் கைதாகி திகார் சிறையிலிருந்தவாறு, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, ஒமர் அப்துல்லாவை 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்திய பொறியாளர் ரஷீத் போன்று, இத்தேர்தலில் பிரிவினைவாத தலைவர் சர்ஜன் அகமது வாகாய் (எ) பர்கதி உற்று கவனிக்கப்படுகிறார். இவர் பீவா மற்றும் கந்தர்பால் தொகுதிகளில் போட்டியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.