ஆந்திரா: நாட்டின் 18வது நாடாளுமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவுபெற்றுள்ளது. இதனை அடுத்து, ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் அம்மாநில சட்டமன்றத் தேர்தல், ஒரே கட்டமாக மே 13ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, அம்மாநிலங்களில் பிரசாரப் பணிகள் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம், புலிவெந்துலா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஆந்திரா முதலமைச்சருமான ஜெகன் மோகன் ரெட்டி தரப்பில், அக்கட்சி நிர்வாகிகள் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.
அதன்படி, ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சொத்து மதிப்பு, கடந்த 5 ஆண்டுகளில் 41 சதவீதம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. அவரது ஆண்டு வருமானம் ரூ.57.75 கோடி எனக் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அவரது சொத்து மதிப்பு ரூ.529.50 கோடியாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சொத்து மதிப்பு உயர்வு மற்றும் தங்கைக்கு வழங்கிய கடன்: மேலும், கடந்த 2019 சட்டமன்றத் தேர்தலின் போது, இவரது சொத்து மதிப்பு ரூ.375.20 கோடி என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தகக்து. ஜெகன் மோகனின் மனைவி பாரதி ரெட்டியின் பெயரில் ரூ.176.30 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளதாகவும், ரூ.5.30 கோடி ரூபாய் மதிப்பிலான 6.4 கிலோ தங்கம் மற்றும் வைரங்கள் உள்ளதாகவும் வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஒய்எஸ்ஆர் கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஒய்.எஸ்.சர்மிளா, தனது சகோதரரான ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியிடமிருந்து ரூ.83 கோடி கடனாகப் பெற்றுள்ளதாக அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.
ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் அவரது மனைவியின் பெயரில் இருக்கும் பெரும்பாலான சொத்துக்கள் பாரதி சிமெண்ட்ஸ், சரஸ்வதி சிமெண்ட்ஸ் மற்றும் சந்தூர் பவர் போன்ற பல்வேறு நிறுவனங்களின் பங்குகளின் வடிவில் உள்ளன. மேலும், ஜெகன் மோகன் ரெட்டி மீது 26 வழக்குகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை அவர் முதலமைச்சராக பதிவி ஏற்பதற்கு முன்பு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தரப்பில் போடப்பட்டவை.
சொத்து மதிப்பில் முதலமைச்சரை முந்தும் எதிர்கட்சி வேட்பாளர்: இதனிடையே, நேற்று (திங்கட்கிழமை) ஆந்திராவில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக 112 வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில் குண்டூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தெலுங்கு தேச கட்சியின் (TDP) வேட்பாளர் பெம்மசானி சந்திரசேகர், தன்னிடம் ரூ.5 ஆயிரத்து 785 கோடி ரூபாய் குடும்ப சொத்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதன்படி, பெம்மசானி சந்திரசேகரின் தனிப்பட்ட சொத்து மதிப்பு ரூ.2 ஆயிரத்து 448 என்றும், அவரது மனைவி பெயரில் ரூ.2 ஆயிரத்து 343.78 கோடி மதிப்பிலான சொத்துக்களும் மற்றும் அவரது குழந்தைகளின் பெயரில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளதும் தெரியவந்துள்ளது.
மேலும், அமெரிக்காவின் பிரபல வங்கியான ஜேபி மோர்கன் வங்கியில் (JP Morgan bank), இவரது குடும்பம் ஆயிரத்து 138 கோடி ரூபாய் கடன்பட்டிருப்பதும், 2022ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை ரூ.605.57 கோடி ரூபாய் அமெரிக்காவில் வரியாக செலுத்தியுள்ளதும் வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், இவர் அமெரிக்காவைச் சார்ந்த பல்வேறு நிறுவனங்களில் பங்கு பகிர்வதும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: முல்லை பெரியாறு விவகாரத்தில் சர்வே ஆஃப் இந்தியா ஆய்வறிக்கையை ஏற்க முடியாது: தமிழக அரசு அதிரடி!