லக்னோ: ரேபரேலி எம்பி-யும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தியின் இரட்டைக் குடியுரிமை தொடர்பான புகார் குறித்து மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்த விவரங்களை தாக்கல் செய்யுமாறு அலகாபாத் உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக நிர்வாகி எஸ்.விக்னேஷ் ஷிஷிர் என்பவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ அமர்வில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் ராஜன் ராய், ஓம் பிரகாஷ் சுக்லா ஆகியோர் அடங்கிய அமர்வு, "ராகுல் காந்தி தொடர்புடைய குடியுரிமை விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து தேவையான அனைத்து தகவல்களையும் பெற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்" என அரசின் கூடுதல் வழக்குரைஞர் (ஏஎஸ்ஜி) சூர்யபன் பாண்டேவுக்கு உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை வரும் 30ம் தேதி நடைபெறும் எனவும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
பாஜக நிர்வாகி எஸ்.விக்னேஷ் ஷிஷிர் உயர் நீதிமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் இதே விவகாரம் தொடர்பாக மனுத்தாக்கல் செய்திருந்தார். அப்போது, குடியுரிமைச் சட்டம் 1955-ன் கீழ் தகுதிவாய்ந்த அதிகாரியை அணுகுமாறு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இதையும் படிங்க: நெய் மட்டுமல்ல ஏலக்காய், முந்திரியிலும் ஊழல்? ஆந்திர விஜிலென்ஸ் தீவிர விசாரணை!
ராகுல் பிரிட்டிஷ் குடிமகன் என்பதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகக் கூறிய விக்னேஷ் ஷிஷிர், ராகுல் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் எனவும் தெரிவித்து வருகிறார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பிரிட்டிஷ் அரசிடமிருந்து வந்த ரகசிய மின்னஞ்சல்களும் இருப்பதாக அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.
உரிய அதிகாரிகளிடம் இருமுறை புகார் அளித்தும் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, விக்னேஷ் ஷிஷிர் மீண்டும் அலகாபாத் உயர் நீதிமன்ற லக்னோ அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் கடந்த புதன்கிழமை உயர் நீதிமன்றத்தில் அவர் நேரில் ஆஜராகி, ராகுல் இரட்டை குடியுரிமை விவகாரம் குறித்து மத்திய புலனாய்வு அமைப்பு சிபிஐ) விசாரணை நடத்த வேண்டும் என தனது வாதத்தின்போது வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்