டெல்லி : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தேர்தலுக்கு பின் புதிய அரசு அமைந்ததும் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். குடியரசு தலைவரின் பட்ஜெட் உரை மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி பிரதமர் மோடி மக்களவையில் உரை நிகழ்த்தினார்.
-
Union Finance Minister Nirmala Sitharaman lays on the Table a copy of the 'White Paper on the Indian Economy' today, in Lok Sabha pic.twitter.com/oYFwUHtSeE
— ANI (@ANI) February 8, 2024
தொடர்ந்து கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரையாற்றினார். காங்கிரஸ் தலைமையிலான 2014-க்கு முந்தைய மத்திய அரசின் 10 ஆண்டு காலத்தில், இந்தியாவின் பொருளாதார நிலையுடன் தற்போது மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரத்தை ஒப்பிடும் வகையில் மத்திய அரசு வெள்ளை அறிக்கை கொண்டு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் தாக்கல் செய்த வெள்ளை அறிக்கையில், காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 10 ஆண்டு கால ஆட்சியில் எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகளால் பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்த போது, பொருளாதாரம் மிகவும் பலவீனமாக இருந்ததாகவும் பொது நிதி மோசமான நிலை, வாராக்கடன் அதிகமாக இருந்ததால் வங்கிகள் அதிக பலவீனமாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், பல்வேறு துறைகள் பொருளாதார ரீதியில் பின்தங்கி இருந்ததாகவும், பொருளாதார முறைகேடு மற்றும் பரவலாக ஊழல் நிறைந்து இருந்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம் 2008ஆம் ஆண்டு ஏற்பட்ட உலக பொருளாதார மந்த நிலையின் போது இந்திய பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்படவில்லை என வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரதமர் மோடி தலைமையிலான அரசு கடந்த 10 ஆண்டு மேற்கொண்ட நீடித்த முயற்சிகள் காரணமாக நாட்டின் பொருளாதாரம் உறுதிப்டுத்தப்பட்டு உள்ளதாகவும், தற்போது வளர்ச்சிப் பாதையில் பொருளாதாரம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு விட்டுச் சென்ற சவால்களை தற்போதைய அரசு வெற்றிகரமாக முறியடித்துள்ளோம் என்றும் 2047 ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நிர்மலா சீதாராமன் வெளியிட்டு உள்ள வெள்ளை அறிக்கையில் நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு, காமன்வெல்த் விளையாட்டு, 2ஜி ஊழல், சாரதா சிட் பண்ட், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு, ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு, ஆன்ட்ரிக்ஸ்-தேவாஸ் ஒப்பந்தம், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் உள்ளிட்ட சில முக்கிய ஊழல்கள் குறித்தும் குறிப்பிடப்பட்டு உள்ளன.
இதையும் படிங்க : கேரளா தற்கொலை படை தாக்குதல் சதித் திட்டம்: ரியாஸ் அபூபக்கர் குற்றவாளி - சிறப்பு நீதிமன்றம்!