டெல்லி: டெல்லி அலிபூரில் உள்ள தயாள் சந்தையில், நேற்று (பிப்.15) மாலை 5.30 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்நிலையில், இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, இன்று (பிப்.15) 11ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து டெல்லி தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், "தயாள் சந்தை பகுதியில் அமைந்துள்ள 2 பெயிண்ட் தொழிற்சாலைகள் மற்றும் கெமிக்கல் குடோனில் நேற்று மாலை 5.30 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் தற்போது 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஒரு காவல் அதிகாரி உள்பட 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் தற்போது வரை அடையாளம் காணப்படவில்லை.
அவர்களின் உடல்கள் பாபு ஜக்ஜீவன் ராம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும், படுகாயம் அடைந்தவர்கள் ஜோதி (42), திவ்யா (20), மோஹித் சோலங்கி (34) மற்றும் டெல்லி காவல் அதிகாரி கரம்பீர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். தற்போது, அந்த நான்கு பேரும் ராஜா ஹரிஷ் சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்" எனத் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், "நேற்று மாலை 5.30 மணியளவில் இந்த தீ விபத்து நிகழ்ந்தது. பயங்கர சத்தம் கேட்டு அனைவரும் வந்து பார்த்தோம். அப்போது, இரண்டு குடோன்கள் தவிர, சந்தையில் உள்ள எட்டு கடைகளிலும் தீ வேகமாகப் பரவியது. எவ்வளவு முயற்சித்தும் தீயை அணைக்க முடியவில்லை.
அதைத் தொடர்ந்து, தகவலின் பேரில் சுமார் 7 முதல் 8 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். பின்னர், கடும் போராட்டத்திற்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தீ விபத்து குறித்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த விபத்திற்கான சரியான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படாததாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கொடைக்கானலில் புதிதாக கட்டப்பட்ட 100 அடி நீள சுவர் சரிந்து விபத்து! கடைகள் இடிந்து தரைமட்டம்! என்ன நடந்தது?