அஸ்வரப்பேட்டை (தெலங்கானா): தெலுங்கானா மாநிலம், அஸ்வரப்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட ரெகெல்லகும்பு கிராமத்தில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பல ஆண்டுகளாக சாலை வசதி உள்ளிட்ட எந்த விதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படாததால், கடந்த 9 மாதங்களில் மட்டும் 9 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
ரேகெல்லாகும்பு என்ற பழங்குடியின கிராமத்தில் 45 குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமத்தின் மொத்த மக்கள் தொகை197. இதில் ஐந்து வயதுக்கு உட்பட்ட 34 குழந்தைகள், 13 கைக்குழந்தைகள் மற்றும் 8 கர்ப்பிணிகள் உள்ளனர்.
இந்த மக்களின் பெரும் பிரச்னையாக இருப்பது, அஸ்வரப்பேட்டையில் இருந்து ரேகல்லகும்புனா கிராமத்திற்குச் செல்ல வேண்டும் என்றால், ஆறுகளைக் கடந்து காட்டுப் பகுதிக்கு 7 கி.மீ நடந்து செல்ல வேண்டும். இதன் காரணமாக, இங்குள்ள கர்ப்பிணிகளுக்கு உறிய மருத்துவ சிகிச்சை எடுக்க முடியாமல் குழந்தைகள் உயிரிழக்கின்றனர் என அங்குள்ள பழங்குடியின மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி இடிமி பேசுகையில், “மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் யாரும் எங்கள் வீட்டிற்கு வருவதில்லை. எப்போதாவது ஒரு முறை கிராமத்தைச் சுற்றிப் பார்க்க வருவார்கள். அப்போது ஊருக்குள் யாரும் இருக்க மாட்டார்கள், எல்லோரும் வயல் வெளியில் வேலை செய்து கொண்டு இருப்பார்கள்.
இதனால் மருத்துவர்களைச் சந்திக்க முடிவதில்லை. மருத்துவர்கள் கிராமத்திற்கு வருவதற்கு முன்கூட்டியே தகவல் கொடுத்தால் நன்றாக இருக்கும். இல்லை என்றால், அவர்களைச் சந்திக்க 7 கி.மீ தூரம் நடந்து சென்று பார்க்க வேண்டியுள்ளது" என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, மற்றொரு கிராமவாசியான லட்சுமி கூறுகையில், “ரெகெல்லகும்புவில் உள்ள குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையங்களிலிருந்து வழங்கப்படும் பால், முட்டை உள்ளிட்ட எந்த விதமான உணவுப் பொருள்களையும் வழங்குவதில்லை.
இதனால் இங்குள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகின்றது. இந்த நிலையில் இங்கு வரும் அதிகாரிகள், குழந்தைகளுக்கு அனைத்து உணவுகளையும் கொடுப்பது போல் போட்டோ எடுத்து விட்டுச் சென்றுவிடுகின்றார். தங்கள் கிராமத்தில் ஒரு அங்கன்வாடி மையம் அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும்" என கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக கும்மடவல்லி மருத்துவ அலுவலர் டாக்டர் மதுலிகாவிடம் நாம் அணுகியபோது, “ரெகெல்லகும்பு கிராமத்துப் பெண்கள் யாரும் கர்ப்பமான பிறகு மருத்துவமனைக்கு வருவதில்லை. ஊழியர்கள் வீட்டுக்குள் சென்றாலும், மருத்துவப் பரிசோதனை செய்ய யாரும் முன்வருவதில்லை" எனத் தெரிவித்தார்.
இறுதியாக ஐசிடிஎஸ் சிடிபிஓ ரோஜாராணி இது குறித்து கூறியபோது, “குழந்தைகள், கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள் போன்றவர்களுக்கு ரெகெல்லவில் இருந்து 9 கி.மீ தொலைவில் உள்ள கந்தலகுடம் அங்கன்வாடி மையத்தில் இருந்து சத்துணவு வழங்கப்படுகிறது.
கடந்த 9 மாதங்களில் 9 குழந்தைகள் இறந்ததற்கான காரணம், அவர்கள் அனைவரும் வீட்டில் பிறந்தவர்கள். இங்குள்ள பழங்குடியின மக்களுக்கு, குடும்பக் கட்டுப்பாடு குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை. மேலும் இங்குள்ள, பல கர்ப்பிணிகளுக்கு ரத்தசோகை போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதாகத் தெரிகிறது. இதனை சரி செய்ய முயற்சி செய்து வருகிறோம்” என்றார்.
இதையும் படிங்க: கோயில் திருவிழாவுக்கு வந்த 17 வயது சிறுமிக்கு கூட்டுப்பாலியல் தொல்லை.. திருப்பூரில் நிகழ்ந்த கொடூரம்.. 7 பேர் அதிரடி கைது!