மும்பை (மகாராஷ்டிரா): 2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதைத் தொடர்ந்து, நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முழுவீச்சில் செய்து வருகின்றன. அதேபோல, இந்திய தேர்தல் ஆணையமும் நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை மும்முரமாக செய்து வருகிறது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் தேர்தல் அதிகாரிகள் குழு பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று ஆலோசனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், கடந்த வாரம் தமிழகம் வந்த தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான குழு, பிப்.23 மற்றும் பிப்.24 ஆகிய தேதிகளில் மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ மற்றும் தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக மகாராஷ்டிரா மாநில புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக, மூத்த ஐஏஎஸ் அதிகாரி சொக்கலிங்கத்தை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. மகாராஷ்டிராவின் தற்போதைய தலைமை தேர்தல் அதிகாரி ஸ்ரீகாந்த் எம் தேஷ்பாண்டேவுக்கு பதிலாக இவர் நியமிக்கப்பட உள்ளார்.
புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்க உள்ள தமிழகத்தைச் சேர்ந்த சொக்கலிங்கம், 1996ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
இதையும் படிங்க: "கர்நாடக சட்டப்பேரவையில் பாகிஸ்தான் ஜிந்தாபாத்"? - பாஜக குற்றச்சாட்டு என்ன? தடயவியல் சோதனை!