பெங்களூரு : கர்நாடக மாநிலம் பெங்களூரு டாலர்ஸ் காலனியில் தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா, தனக்கு எதிரான பாலியல் வழக்கு குறித்து அறிந்ததாகவும், கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன் தாய் மற்றும் மகள் கண்ணீரும் கம்பளையுமாக சந்திக்க வந்ததாகவும் தெரிவித்து உள்ளார்.
அதற்கு முன் பலமுறை தன்னை சந்திக்க வந்த போது இருவரையும் அனுமதிக்காத நிலையில், கண்ணீருடன் காத்திருந்த காரணத்தால் காண அனுமதித்ததாகவும் தெரிவித்தார். திருட்டு புகாரில் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக பெண் கூறியதை அடுத்து காவல் ஆணையரை தொடர்பு கொண்டு உரிய விசாரணை நடத்தி பெண்ணுக்கு உரிய நீதி பெற்றுத் தருமாறு தான் அறிவுறுத்தியதாக எடியூரப்பா தெரிவித்து உள்ளார்.
மேலும், தாய் மற்றும் மகளை காவல் ஆணையரிடம் அனுப்பி வைத்ததாகவும் அதன்பின், இருவரும் தன் மீது புகார் அளித்து உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், தாய் மற்றும் மகள் மனதளவில் பாதிக்கப்பட்டவர்கள் போல் காணப்படுவதாக எடியூரப்பா கூறினார். மேலும், தாய் மற்றும் மகளிடம் அதிகம் பேசி பயனில்லை என்பதால் அவர்களை காவல் ஆணையரிடம் அனுப்பினேன் என்றும் ஆனால் இது வேறுவிதமாக செய்யப்பட்டு புகார் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் எடியூரப்பா கூறினார்.
இந்த வழக்கை சட்டப்படி சந்திப்பேன் என்றும் இதை அரசியல் சதி என்று கூற மாட்டேன் என எடியூரப்பா தெரிவித்து உள்ளார். ஆனால் அடுத்தவருக்கு உதவி செய்ய போனால் என்ன நடக்கும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம் என்றும் தாய் மற்றும் மகள் சிரமங்களை எதிர்கொள்வதால் தான் பணம் கொடுத்து அனுப்பியதாகவும் ஆனால் இது இப்படி திசை திருப்பப்பட்டு உள்ளதாகவும் எடியூரப்பா கூறினார்.
முன்னதாக தாய் மற்றும் 17 வயது மகள் ஆகிய இருவரும் பெங்களூரு சதாசிவ் நகர் காவல் நிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் பிஎஸ் எடியூரப்பா மீது பாலியல் புகார் அளித்து உள்ளனர். தனது 17 வயது மகளுக்கு எடியூரப்பா பாலியல் தொல்லை கொடுத்ததாக தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.
இந்த புகார் தொடர்பாக சதாசிவ் நகர் போலீசார், முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த மாநில உள்துறை அமைச்சர் பரமேஷ்வர், சிலர் புகார் அளித்த பெண் மனதளவில் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.
ஆனால் பெண் கைப்பட எழுதிய புகாருக்கு பதிலாக டைப் செய்த புகாரை வழங்கியதாக போலீசார் தன்னிடம் தெரிவித்ததாக அவர் கூறினார். மேலும் முதற்கட்ட விசாரணை நடந்து வருவதால் உண்மையான காரணம் தெரியவந்ததும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தேவைப்படும்பட்சத்தில் பெண்ணின் குடும்பத்திற்கு தகுந்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க : 2024 மக்களவை தேர்தல் தேதி: இந்திய தேர்தல் ஆணையம் நாளை அறிவிப்பு!