ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் காப்ரா பிருந்தாவன் காலனியைச் சேர்ந்த மதகனி பாலிஷெட்டி - மாதவி தம்பதியரின் மகள் ஸ்வேதா. கடந்த 2009ஆம் ஆண்டு மருந்தக தொழிலுக்காக ஆஸ்திரேலியா சென்ற ஸ்வேதாவிற்கு, ஆஸ்திரேலியாவில் மென்பொருள் பொறியாளராக இருந்த அசோக் ராஜு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, பின் அது காதலாக மாறியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, வெளிநாடு வாழ் இந்தியரான (NRI - Non-Resident Indian) அசோக் ராஜு, கடந்த 2012இல் ஹைதராபாத்தில் ஸ்வேதாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது ஆஸ்திரேலியாவில் விக்டோரியா மாகாணத்தில் 4 வயது மகனுடன் தங்கி இருந்துள்ள நிலையில், ஸ்வேதாவை அசோக் ராஜு கொலை செய்ததாக கூறப்படுகிறது. மேலும், ஸ்வேதாவின் உடலை விக்டோரியா மாகாணத்தில் இருந்து 82 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பக்லியின் வெறிச்சோடிய பகுதியில் வீசியுள்ளார். அதன்பின், தன் மகனுடன் இந்தியா வந்து, மகனை ஸ்வேதாவின் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, உயிரிழந்தவர் ஸ்வேதா என அடையாளம் காணப்பட்ட நிலையில், இது குறித்து ஸ்வேதாவின் பெற்றோர் கூறுகையில், “அசோக் ராஜு ஸ்வேதாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும், அவர் போலீசில் சரணடையவும் திட்டமிட்டுள்ளார்.
கடந்த 5ஆம் தேதி ஸ்வேதா கடைசியாக போனில் பேசினார். அப்போது அசோக் ராஜு, ஸ்வேதாவுடன் தகராறில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார். மேலும், குடும்ப வன்முறையில் ஈடுபட்ட கணவர் மீது ஸ்வேதா புகார் அளிக்கப் போவதாகவும் கூறினார். ஸ்வேதா மீதுள்ள வெறுப்பில், அவளை கொலை செய்திருக்கலாம்” என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சவுதியில் கணவன் பிடியில் சிக்கிய மகள்! தாயின் பாசப் போராட்டம்! மத்திய அமைச்சருக்கு கடிதம்!