ஹைதராபாத்: பெங்களூருவில் பெண் வேடமிட்டு, டேட்டிங் இணையதளங்கள் மூலம் அமெரிக்கர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் பணம் பறித்த நபரை ஹைதராபாத் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
பெங்களூருவில் ஓர் ஆடம்பரமான பகுதியில் மாதம் ரூ.75,000 வாடகையில் வசித்துக் கொண்டும், விலையுயர்ந்த கார்களை ஓட்டிக் கொண்டும் திரிந்த ரித் பேடி என்ற அந்த நபர், அதிநவீன மோசடி செயலில் ஈடுபட்டு போலீசாரிடம் சிக்கியுள்ளார். ஹைதராபாத் சைபர் கிரைம் காவல் துணை ஆணையர் (டிசிபி) தாரா கவிதா இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது; பெங்களூரு புரூக்ஃபீல்ட் பகுதியைச் சேர்ந்த 26 வயதான ரித் பேடி, அமெரிக்காவில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்தவர். அமெரிக்காவில் 6 ஆண்டுகள் வசித்த பின்னர் இந்தியாவுக்கு திரும்பியுள்ளார். பின்னர், தயாரிப்பு வடிவமைப்பாளராக பணிபுரிந்தார். ஆடம்பர வாழ்க்கையை நடத்திய நிலையில், இணையதள விளையாட்டுக்கு அடிமையாகி, தனது வேலையை இழந்தார். பின்னர் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு, குற்றச் செயல்களில் ஈடுபட துவங்கினார்.
இதையும் படிங்க: திருப்பதி லட்டு விவகாரம்; வெளியான ஆய்வக அறிக்கை.. YSRCP-க்கு TDP கடும் கண்டனம்!
இவர் டேட்டிங் செயலிகளிலிருந்து அழகான பெண்களின் புகைப்படங்களை எடுத்து போலியான ஐடி (-புரஃபைல்)களை உருவாக்கி, பல ஆண்களுக்கு வலை வீசியுள்ளார். இந்திய போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக அமெரிக்கர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் கவர்ச்சியாக பேசி, தனது வலையில் வீழ்த்தியுள்ளார். தன்னிடம் சிக்கும் நபர்களிடம் அரை நிர்வாணப் படங்களை அனுப்பி, அவர்களை கவர்ந்திழுப்பார்.
பின்னர் அவர்களது தனிப்பட்ட புகைப்படங்களை வெளியிடாமல் இருக்க பணம் கேட்டு மிரட்டி பறிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இவ்வாறு சிக்கிக் கொண்டவர்களிடம் பணம் பறிக்கும் போது, நேரடியாக தனது வங்கிக் கணக்கில் பெறாமல் ஜெல்லி போன்ற பிற தளங்கள் வழியாக பணத்தைப் பெற்று பின்னர் தனது வங்கிக் கணக்கிற்கு பணத்தை மாற்றி வந்தார்.
இந்நிலையில், அமெரிக்காவில் வசிக்கும் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர் ரித் பேடியிடம் சிக்கிக் கொண்டார். அவரிடம் ரித் பேடி 1,721 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.1,43,800) கேட்டு மிரட்டியுள்ளார். ரித் பேடியின் துன்புறுத்தலை தாங்காமல், பாதிக்கப்பட்ட இளைஞரின் தந்தை ஹைதராபாத் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, பெங்களூருவில் இருந்து மோசடி செயலை அரங்கேற்றிக் கொண்டிருந்த ரித் பேடியை கைது செய்தனர். ஆடம்பரமான வீட்டில் வசிப்பது, பகலில் தூங்கிவிட்டு இரவில் செயல்படுவது, போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக போலி சிம் கார்டுகள், போலி ஜி-மெயில் கணக்குகளை பயன்படுத்தியது போன்ற ரித் பேடியின் தந்திரங்கள் விசாரணை நடத்திய போலீசாரையே திகைக்க வைக்கும் அளவுக்கு இருந்தது” என இவ்வாறு டிசிபி தாரா கவிதா தெரிவித்தார்.