காந்திநகர் : மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (ஏப்.19) தமிழ்நாடு, புதுச்சேரி உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜாரத் மாநிலம் காந்திநகரில் இன்று (ஏப்.19) வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் குஜராத் முதலமைச்சர் புபேந்திர பட்டேல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். மத்திய அமைச்சர் அமித் ஷாவை எதிர்த்து காங்கிரஸ் தரப்பில் சோனல் பட்டேல் களமிறக்கப்பட்டு உள்ளார்.
முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் அமித் ஷாவை எதிர்த்து காங்கிரஸ் தரப்பில் சிஜே சவ்டா களமிறக்கப்பட்டார். அந்த தேர்தலில் அமித்ஷா 5 லட்சத்து 55 ஆயிரம் வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். பின்னாட்களில் சிஜே சவ்டா காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
வேட்புமனு தாக்கலை தொடர்ந்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காந்திநகர் மக்களவைத் தொகுதியில் கடந்த காலங்களில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் பல போட்டியிட்ட நிலையில் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அங்கு போட்டியிடுவது பெருமைக்குரிய விஷயம் என்று தெரிவித்தார்.
எல்.கே அத்வானி, அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோர் காந்திநகர் தொகுதியை பிரதிநிதித்துபடுத்திய நிலையில், பிரதமர் மோடியை வாக்காளாராக கொண்ட தொகுதியில் போட்டியிடுவது மகிழ்ச்சி அளிப்பதாக அமித்ஷா கூறினார். இந்த தொகுதியில் 30 ஆண்டுகளாக எம்எல்ஏவாகவும், எம்பியாகவும் இருந்ததாகவும் இப்பகுதி மக்கள் என் மீது அளவற்ற அன்பை அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
சிறு வயதில் தொழிலாளியாக இருந்த அதே தொகுதியில் இருந்து நாடாளுமன்றம் வந்துள்ளதாகவும், காந்திநகரில் கடந்த 5 ஆண்டுகளில் 22 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களை கைப்பற்றும் என்றும் அமித் ஷா தெரிவித்தார்.
இதையும் படிங்க : மணிப்பூரில் மீண்டும் கலவரம்! வாக்குப்பதிவு மையம் அருகே துப்பாக்கிச் சூடு! 3 பேர் பலி எனத் தகவல்! - Lok Sabha Election 2024