சிம்லா : இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் கழிப்பறை வரி ரூ.25 விதிக்கப்பட்டதாக வெளியான தகவலை அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு மறுத்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "தண்ணீர் இணைப்புக்கு ஒரு குடும்பத்துக்கு ரூ.100 வசூலிக்கிறோம். அதுவும் கட்டாயமில்லை. தற்போது கூறப்படுவது போன்று கழிப்பறை வரி என்று எதுவும் இல்லை" என்றார்.
இமாச்சல பிரதேசத்தின் நகர்ப்புறங்களில் வசிப்பவர்களின் வீடுகளில் ஒரு கழிப்பறைக்கு ரூ.25 வரியாக மாநில விதித்துள்ளதாக தகவல் பரவியதைத் தொடர்ந்து பொதுமக்களிடையே பெரும் சலசலப்பு ஏற்பட்டது. செய்தி தகவல்களின்படி, சுக்விந்தர் சுகு அரசு, குடியிருப்பாளர்களுக்கு தண்ணீர் மற்றும் கழிவுநீர் கட்டணங்களை வசூலிப்பதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டது.
குடிநீர் கட்டணமான ரூ.100-ல், ஒரு குடியிருப்புக்கு 25 சதவீதம் கழிப்பறை வரி விதிக்கப்படும். இந்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து எதிர்க்கட்சியான பாஜக, மாநில அரசை கடுமையாக விமர்சித்துள்ளது. காங்கிரஸ் அரசு அடிப்படை வசதிகளுக்கு கூட வரி விதிப்பதாக மத்திய அமைச்சர்கள் கடுமையாக சாடியுள்ளனர்.
இதையும் படிங்க: சல்மான் கான் பேரில் பானிபூரி நிறுவன உரிமையாளரிடம் ரூ.15 கோடி பறிக்க முயற்சி!
இது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இது உண்மை எனில் நம்பமுடியவில்லை. பிரதமர் மோடி ஸ்வச்சதாவை (தூய்மை) மக்கள் இயக்கமாக உருவாக்கிறார். இங்கோ காங்கிரஸ், மக்களிடம் கழிப்பறைக்கு வரி விதிக்கிறது. அவர்கள் ஆட்சியில் சிறந்த சுகாதாரத்தை வழங்கவில்லை என்பது வெட்கக்கேடானது. இந்த நடவடிக்கை நாட்டை அவமானப்படுத்தும்" என குறிப்பிட்டுள்ளார்.
பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மாள்வியா இந்த நடவடிக்கையை "வினோதமானது" என குறிப்பிட்டுள்ளதோடு, "இதைத்தான் ஒரு முட்டாள்தனமான அரசு செய்கிறது " என காட்டமாக கூறினார்.
இமாச்சல பிரதேச முதல்வர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஒரு குடும்பத்துக்கு ரூ. 100 கட்டணம் விதிக்கப்படும். இருப்பினும், அது கட்டாயமில்லை. பெரிய ஹோட்டல்கள் கூட இந்தப் புதிய வரியின் வரம்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கையை கேள்வி கேட்பவர்கள் முதலில் பொருளாதாரத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். முந்தைய பாஜக அரசு ரூ.5 ஆயிரம் கோடிக்கு இலவசங்களை வழங்கி, அரசின் கஜானாவை காலி செய்துவிட்டது. இந்த விவகாரத்தை அரசியல் ஆக்குவதை பாஜக கைவிட வேண்டும் என்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்