புதுடெல்லி: டெல்லியில் உள்ள ஆறு பள்ளிகளுக்கு மின்னஞ்சலில் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் அனுப்பியுள்ளதால் பள்ளி வளாகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு சோதனை நடந்து வருகிறது.
டெல்லியில் உள்ள டிபிஎஸ், சல்வான் பள்ளி, மாடர்ன் பள்ளி மற்றும் கைலாஷ் கிழக்கில் அமைந்துள்ள கேம்பிரிட்ஜ் ஆகிய பள்ளிகளுக்கு வந்த மின்னஞ்சலில்,'' உங்கள் பள்ளி வளாகத்தில் ஏராளமான வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்திற்குள் நுழையும் போது நீங்கள் அனைவரும் உங்கள் மாணவர்களின் பைகளை அடிக்கடி சோதனை செய்ய வேண்டும். இந்த குண்டுகள், கட்டிடங்களை ஒட்டுமொத்தமாக அழிக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்தவை. டிசம்பர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் உங்கள் பள்ளிகள் வெடிகுண்டு வெடிப்பை எதிர்கொள்ள நேரிடும். குண்டுவெடிப்பை நிறுத்துவதற்கு ஈடாக 30,000 டாலர் வழங்க வேண்டும். இல்லையெனில் வெடிகுண்டு வெடிக்கும்" என்று மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பேரிடர் மேலாண்மை மசோதாவிற்கு எதிர்ப்பு...நாடாளுமன்றத்தில் வாதிட்ட திமுக எம்பிக்கள்!
இதனால் சம்மந்தப்பட்ட பள்ளிகள் மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. மேலும், தீயணைப்பு துறையினர், போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு பள்ளிகளில் சோதனை நடந்து வருகிறது.
பள்ளிகளில் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ள காவல்துறை விசாரணையில் சந்தேகத்திற்கு இடமான எதுவும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளது. முன்னதாக, டெல்லியில் உள்ள 40க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு டிசம்பர் 8ஆம் தேதி இரவு இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதுபோன்ற மிரட்டல்கள் குழந்தைகளை எவ்வாறு பாதிக்கும்'' என கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லியில் உள்ள ஆறு பள்ளிகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று பெற்றோருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் பரபரப்பு நிலவுகிறது.