ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக ஹேமந்த் சோரன் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், நில மோசடி மூலம் கோடிக்கணக்கான பணத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக முதலமைச்சர் ஹேமந்த் சோரன் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.
மேலும், இந்த வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை தொடர்ந்து சம்மன் அனுப்பி வந்தது. இறுதியில் கடந்த 20ஆம் தேதி அமலாக்கத்துறை முன் ஹேமந்த் சோரன் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் வழக்கு தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.
-
ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் ராஜினாமா! #etvbharat #etvbharattamil #HemantSoren #JharkhandCM #JharkhandNews #hemantsorenresign pic.twitter.com/mskpyYPoEm
— ETVBharat Tamilnadu (@ETVBharatTN) January 31, 2024
இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் டெல்லியில் உள்ள ஹேமந்த் சோரன் இல்லத்தில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி 36 லட்ச ரூபாய் பணம் மற்றும் பி.எம்.டபிள்யூ. கார் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து, ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (ஜன. 31) விசாரணை நடத்தினர்.
ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரனின் வீட்டிற்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணை நடத்தினர். ஏறத்தாழ 7 மணி நேர தொடர் விசாரணைக்கு அடுத்து முதலமைச்சர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
இதையடுத்து அவர் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். முன்னதாக ஜார்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், தனது முதலமைச்சர் பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்ததார். அடுத்த முதலமைச்சராக ஹேமந்த் சோரன் அமைச்சரவையில் போக்குவரத்து மற்றும் பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பை சோரன் பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. விரைவில் ஹேமந்த் சோரன் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் எனக் கூறப்படுகிறது. ஹேமந்த் சோரன் கைதால் இந்தியா கூட்டணிக்கு மீண்டும் ஒரு பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை!