மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை, புனே உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. மகாராஷ்டிராவுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என மாநில அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கனமழையால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் அத்தியாவசிய பணிகள் தவிர்த்து வெளியே வர வேண்டாம் என்றும் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் மாநில அரசு தெரிவித்துள்ளது. தொடர் கனமழைக்கு மத்தியிலும் பிரஹன் மும்பை மாநகராட்சி பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழையின் காரணமாக பள்ளிகள் மூடப்படும் என தேவையற்ற வதந்திகள் பரவினால் நம்ப வேண்டாம் என பிரஹன் மும்பை நகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராய்கட் மற்றும் ரத்னகிரி மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாக கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வானிலை ஆய்வு மையம் தொடர் கனமழைக்கான எச்சரிக்கை விடுத்ததை அடுத்து ரத்னகிரி மற்றும் ராய்கட் மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் நடைபெற இருந்த தேர்வுகளை மும்பை பல்கலைக்கழகம் ஒத்திவைத்துள்ளது. தொடர் கனமழையால் மாணவர்கள் கல்லூரிகளுக்கு வருவதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளதை அடுத்து கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதகாவும், தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 25வது கார்கில் போர் நினைவு தினம்! விஜய் திவாஸ் போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை! - 25th Kargil Vijay Diwas