சண்டீகர்: முதல்வர் நயாப் சிங் சைனி, மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மனு பாக்கர் ஆகியோர் இன்று வாக்களித்தனர். முதல்வர் சைனி, காங்கிரஸ் தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா, வினேஷ் போகத் மற்றும் ஜனநாயக் ஜனதா கட்சியின் (ஜேஜேபி) துஷ்யந்த் சவுதாலா ஆகியோர் களத்தில் உள்ளனர். ஹரியானா பேரவைத் தேர்தலில் மொத்தம் 1,027 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
அம்மாநிலத்தில் 10 ஆண்டுகால பாஜகவை வீழ்த்தி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நம்பிக்கையில் காங்கிரஸ் இத்தேர்தலை எதிர்கொள்கிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை வரும் 8ம் தேதி நடைபெறுகிறது.
இதையும் படிங்க: சத்தீஸ்கர் வரலாற்றில் பெரிய என்கவுன்ட்டர்: 31 நக்சல்களின் சடலங்கள் மீட்பு; தேடுதல் வேட்டை தீவிரம்
குருஷேத்ராவின் லாட்வா தொகுதியில் போட்டியில் உள்ள முதல்வர் சைனி, அம்பாலா மாவட்டத்தின் நாராயன்கரில் உள்ள தனது சொந்த கிராமமான மிர்சா-வில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்களித்தார். ஹரியானா முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார் கர்னலிலும், மனு பாக்கர் தனது பெற்றோருடன் ஜஜ்ஜார் மாவட்டத்தில் உள்ள கோரியா கிராமத்திலும் வாக்களித்தனர்.
பஞ்ச்குலாவில் துணை போலீஸ் கமிஷனர் (டிசிபி) ஹிமாத்ரி கவுசிக், துணை ராணுவப் படைகள் மற்றும் காவல்துறையினரின் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தார். பதற்றமான வாக்குச் சாவடிகளில் தீவிர கண்காணிப்புப் பணியை மேற்கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தினார்.
எல்லனாபாத் துணை கோட்டாட்சியர் ராஜேஷ் குமார் கூறுகையில், "வாக்குப்பதிவுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்காளர்கள் அதிகபட்ச பங்கேற்பை உறுதிசெய்ய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது" என்றார்.
மாலை 5 மணி நிலவரப்படி ஹரியானாவில் 61 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்