டெல்லி : நடப்பாண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசு தலைவர் உரையுடன் நேற்று (ஜன. 31) தொடங்கியது. தொடர்ந்து 2024 - 25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப். 1) தாக்கல் செய்தார். விரைவில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதால் பல்வேறு அறிவிப்புகளை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.
அதன்படி 9 முதல் 14 வயது அடிப்படையிலான சிறுமிகளுக்கு கர்பப்பை புற்றுநோய் எதிர்ப்பு தடுப்பூசி திட்டத்தை மத்திய அரசு ஊக்குவிக்க உள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மேலும் மகப்பேறு குழந்தை பராமரிப்புக்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுவதில் ஒருங்கிணைந்த ஒரு விரிவான திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும் என்றும் சக்சம் அங்கன்வாடி மற்றும் போஷன் 2.0 திட்டத்தின் கீழ் உள்ள அங்கன்வாடி மையங்களை மேம்படுத்துதல் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஊட்டச்சத்து விநியோகம், குழந்தை பருவ பராமரிப்பு மற்றும் மேம்பாட்டிற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
மேலும், பல இளைஞர்கள் மருத்துவர்களாக தகுதி பெற வேண்டும் என்று லட்சியத்துடன் பயணித்து வருவதாகவும் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு துறைகளின் கீழ் இருக்கும் மருத்துவமனை உள்கட்டமைப்புகளைப் பயன்படுத்தி மேலும் மருத்துவக் கல்லூரிகளை அமைக்க அரசு திட்டமிட்டு உள்ளதாகவும் இது குறித்த பிரச்சினைகளை ஆய்வு செய்து, உரிய பரிந்துரைகளை வழங்க, தனிக் குழு அமைக்கப்படும் என்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
நடப்பாண்டில் மூலதன செலவீனங்களுக்கான நிதியை 11 புள்ளி 1 சதவீதம் உயர்த்தி 11 புள்ளி 11 லட்சம் கோடி ரூபாயாக நிர்மலா சீதாராமன் அறிவித்து உள்ளார். இதன் மூலம் நீண்ட கால அரசு சொத்துகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த உதவும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2023-24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடரில் மூலதன செலவீனங்களுக்கான தொகை 33 சதவீதம் உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த நிதி ஆண்டின் முழு பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மூலதன செலவீனங்களுக்கான தொகையை 33 சதவீதம் உயர்த்தி 10 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கி இருந்தார். மூலதன செலவீனங்களுக்கான தொகையை உயர்த்தியதன் மூலம் மத்திய அரசு, நாட்டின் வளர்ச்சி திறன் அதிகரிப்பு, புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்குதல், தனியார் முதலீடுகளை ஈர்ப்பது உள்ளிட்ட திட்டங்களை மேம்படுத்த திட்டமிட்டு உள்ளது.
இதையும் படிங்க : Budget 2024: வருமான வரி செலுத்துபவர்களுக்கு நிம்மதி! இடைக்கால பட்ஜெட்டில் வரிவிகித அறிவிப்பு என்ன?