மும்பை: இந்தியா மட்டுமல்லாது, உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில், முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட்டின் திருமண விழா இன்று மும்பையில் அமைந்துள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் மாலை 3 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெறும் திருமண நிகழ்வுக்கு முன்னரே, இவர்கள் கடந்த 6 மாதங்களாக நடத்தி வந்த திருமண சடங்குகளின் புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்தது. இத்திருமண விழாக் கொண்டாட்டம் ஜூலை 15ஆம் தேதிவரை நடைபெறவிருக்கிறது.
இத்திருமணத்திற்கு, சினிமாப் பிரபலங்கள் மட்டுமல்லாது கிரிக்கெட் வீரர்கள், அரசியல் பிரமுகர்கள் என உலகம் முழுவதும் உள்ள ஹைபுரோஃபைல் கொண்ட நபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு மிகப்பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இருந்து ரஜினிகாந்த், ஏ.ஆர் ரஹ்மான், நயன்தாரா ஆகியோரில் தொடங்கி முன்னாள் இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர், பிரியங்கா சோப்ரா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பர் பங்கேற்றுள்ளனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் நடனமாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர்களின் ப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக பிரபல பாப் சிங்கர்கள் ஜஸ்டின் பைபர், ரிஹானா ஆகியோர் இந்தியா வரவழைக்கப்பட்டு கான்சர்ட் நடத்தப்பட்டது.
இதில் ஜஸ்டின் பைபருக்கு ரூ.83 கோடி சம்பளமும், ரிஹானாவுக்கு ரூ.65 முதல் 75 கோடி வரை சம்பளம் வழங்கியதாக கூறப்பட்டது. முன்னதாக, அனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் இணையின் திருமணத்திற்கு முன்பாக சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய 50 ஜோடிகளுக்கு முகேஷ் அம்பானி - நீடா அம்பானி இலவசமாக திருமணம் நடத்தி வைத்தனர். மேலும், மாமன் வீட்டு சீர் என பல கொண்டாட்டங்களில் திருமண வீட்டார் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: இந்தியன் 2 படம் எப்படி இருக்கு? ரசிகர்கள் கூறியது என்ன? - Indian 2 celebration