மும்பை: மகாராஷ்டிரா மாநிலம், சகர் மாவட்டம், நெவாசா தாலுகா, வகாடி கிராமத்தில் உள்ள பாழடைந்த கிணற்றுக்குள் பூனை ஒன்று விழுந்து விட்டது. இதனைப் பார்த்த மாணிக்ராவ் கோவிந்த் காலே (65) என்பவர், பூனையைக் காப்பாற்றுவதற்காகப் பாழடைந்த கிணற்றுக்குள் இறங்கி உள்ளார்.
இந்நிலையில், கிணற்றுக்குள் இருந்த குப்பைக்கழிவுகள் மற்றும் சகதியில் அவர் சிக்கிக்கொண்டார். உடனே மாணிக்ராவ்வைக் காப்பாற்ற சந்தீப் மாணிக் காலே(36), அணில் பாபுராவ் காலே(58), விஷால் அணில் காலே(23), பாபா சாகேப் பவார் (35) மற்றும் விஜய் மாணிக் காலே என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கிணற்றுக்குள் குதித்தனர்.
கிணற்றுக்குள் குதித்த அனைவரும் மூச்சுத்திணறல் மற்றும் விஷவாயு கசிவு காரணமாக உயிருக்குப் போராடியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கிராம மக்கள் தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றுக்குள் இருந்த நபர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக மீட்புப் பணி நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
இறுதியில், கிணற்றுக்குள் குதித்த 6 நபர்களில் ஒருவர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டார். மற்ற 5 நபர்களும் இறந்த நிலையில் மீட்கப்பட்டனர். உயிருடன் மீட்கப்பட்ட நபரைச் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதையும் படிங்க: "ஊடுருவல்காரர்களே வாக்கு வங்கி... அதனாலே சிஏஏவுக்கு எதிராக மம்தா வேடம்" - அமித் ஷா காட்டம்! - Lok Sabha Election 2024