காசியாபாத்: உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் உள்ள லோனி எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது பெஹ்தா ஹாஜிபூர் கிராமம். இந்த கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் பெஹ்தா ஹாஜிபூர் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் நேற்று (புதன்கிழமை) மளமளவென தீ பற்றி எரிந்துள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வருகை புரிந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயானது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர். இந்த விபத்தில் ஏழு மாதக் குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து காவல்துறை ஆணையர் தினேஷ்குமார் கூறியதாவது, "லோனி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் (ஜூன் 12) இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டு மக்கள் சிக்கியுள்ளதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 7 மாத குழந்தை, எட்டு வயது குழந்தை மற்றும் இரண்டு பெண்கள் உள்ளனர். இது தவிர, 35 வயதுடைய நபர் ஒருவரும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். இறந்தவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றார்.
மேலும் இந்த தீ விபத்தில் சிக்கிய ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை உட்பட இருவர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர், அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
விபத்து நடைபெற்ற எவ்வாறு? முதற்கட்ட விசாரணையின்படி, மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு, கட்டிடத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு வேகமாகப் பரவியதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் விபத்து நடைபெற்ற வீட்டில் (Foam Cubes) பஞ்சு போன்ற பொருட்கள் இருந்தால் தீ மளமளவெனப் பற்றி எரிந்தாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் முறையான விசாரணை மேற்கொண்டு வருகிறோம் விரைவில் விபத்து குறித்து காரணம் தெரியவரும்" என்று அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஜூன் 24-ல் தொடங்குகிறது 18-ஆவது மக்களவை கூட்டத்தொடர்!