ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் குறித்து கிடைத்த ரகசிய தகவலை அடுத்து ராஷ்டிரிய ரைபிள்ஸ் மற்றும் ஜம்மு போலீசார் சிறப்பு படையினரும் இணைந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
இரவு 7.45 மணி அளவில் இரு தரப்பினருக்கும் இடையே ஏறத்தாழ 20 நிமிடங்கள் தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. பயங்கரவாதிகளின் தாக்குதலில் அதிகாரி உள்பட இந்திய ராணுவத்தின் 4 பேரும், காஷ்மீர் போலீசார் ஒருவரும் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 5 வீரர்களில் நான்கு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த வீரர்கள் குறித்த தகவலை இந்திய ராணுவ அதிகாரிகள் வெளியிடவில்லை. இருப்பினும் ஒருவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக தகவல் கூறப்படுகிறது.
மேலும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்ற இடத்தில் கூடுதல் பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டு தேடுதல் பணி நடைபெற்று வருவதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பது குறித்து கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மாநிலங்களவையில் பெரும்பான்மை இழந்த பாஜக! அதிமுகவின் ஆதரவை நாடுமா? - BJP loss majority in rajya sabha