போபால் : மத்திய பிரதேச மாநில தலைமை செயலகமான வல்லப பவனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தலைமை செயலகத்தின் 3வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. பற்றி எரியும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடினர். நீண்ட போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அடுக்குமாடி கட்டடமான வல்லப பவனின் 3வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், அமைச்சகத்தின் வாசலில் தூய்மை பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த விஷால் என்பவர் கட்டடத்தில் இருந்து புகை வெளியேறுவதை கண்டு மாநகராட்சி கட்டுபாட்டு அறைக்கு தகவல் அளித்து உள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மூன்றாவது மாடியில் தீ பற்றியதாக கூறப்படும் நிலையில் 15 முதல் 20 வீரர்கள் கடுமையான போராட்டத்திற்கு மத்தியில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தீ விபத்தால் கட்டிடத்தில் இருந்த ஆவணங்கள் மற்றும் முக்கியமான கோப்புகள் என்ன ஆனது என்பது குறித்த எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. அதேபோல் எப்படி தீ விபத்து ஏற்பட்டது என்பது குறித்த தகவல்களும் கூறப்படவில்லை. இந்த சம்பவம் குறித்து முழுமையான அறிக்கை வழங்கக் கோரி தலைமை செயலருக்கு உத்தரவிட்டு உள்ளதாக மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க : கர்நாடகாவில் தலை விரித்தாடும் தண்ணீர் பற்றாக்குறை! மூடு நிலையை எதிர்கொள்ளும் தொழில்நிறுவனங்கள்!