பெங்களூரு: கர்நாடக மாநிலம், பெங்களூருவில் செயல்பட்டு வரும் ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில், மார்ச் 1ஆம் தேதி குண்டுவெடிப்பு சம்பவம் நடத்தது. இதில் உணவகப் பணியாளர்கள் 2 பேர் உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரணையை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக மத்திய வேளாண் துறை இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, கடந்த மார்ச் 19-ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, "பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் தமிழ்நாட்டில் இருந்து வந்தவர்களால்தான் நடைபெற்றது. தமிழ்நாட்டில் இருந்து வருபவர்கள் வெடிகுண்டு தயாரிக்க பயிற்சி எடுத்து, உணவகத்தில் குண்டு வைத்ததாகவும்" கூறியுள்ளார்.
மத்திய இணை அமைச்சர் ஷோபாவின் இந்த கருத்து, பெரும் சர்ச்சையைக் கிளப்பியதைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருவதோடு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் மத்திய இணை அமைச்சர் ஷோபாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக சார்பில் நேற்று (மார்ச் 20) இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு, ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசிய மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மின்னஞ்சல் மூலம் புகார் கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார்.
அதன் அடிப்படையில், மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்ஜாலே மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுத்து, அதன் விவரத்தை 48 மணி நேரத்திற்குள் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என கர்நாடக மாநில தேர்தல் அதிகாரிக்கு இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.
இதன் தொடர்ச்சியாக, கர்நாடக மாநில தேர்தல் அதிகாரிகள் காவல்துறையினரிடம் அளித்த புகாரின் அடிப்படையில், பெங்களூரு காட்டன்பேட்டை காவல் நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், மதுரை சைபர் கிரைம் போலீசார், மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே மீது இந்திய தண்டனைச் சட்டம் 153, 153(A), 505(1)(b), 505(2) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க ஓபிஎஸ் முடிவு? - வெளியில் இருந்து ஆதரவா? - OPS Seat Sharing