மகாராஷ்டிரா: உத்தரப் பிரதேசத்திற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிக மக்களவைத் தொகுதிகள் உள்ளன. மகாராஷ்டிராவில் மொத்தம் 48 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இங்கு, பாஜக - சிவ்சேனா (ஏக்நாத் ஷிண்டே அணி), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் அணி) ஆகிய கட்சிகள் அடங்கிய 'மகாயுதி' கூட்டணி ஆட்சியில் உள்ளது.
இக்கூட்டணியின் முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே உள்ளார். துணை முதலமைச்சராக அஜித் பவார் உள்ளார். தற்போது நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் கடந்த ஏப்.19ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றது. வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெறுகின்றது. அந்த வகையில், தற்போது ஆறு கட்ட தேர்தல் நிறைவு பெற்றுள்ளது. ஐந்தாம் கட்டமாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 48 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மே.20 ஆம் தேதி நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில், மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே ஈடிவி பாரத் ஊடகத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் தேர்தல் தொடர்பான பல்வேறு விஷயங்களை பகிர்துள்ளார்.
"மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்று முடிந்துள்ள தேர்தலுக்குபின் பாஜக தலைமையிலான அரசு தொடரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. கடந்த 50, 60 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த காங்கிரஸ் தலைமையிலான அரசு, செய்ய தவறிய பணிகளை கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு செய்துள்ளது.
நாங்கள் செயல்படுத்தியுள்ள திட்டங்களை அடுத்த 100 ஆண்டுகள் ஆனாலும் காங்கிரஸால் செய்ய முடியாது. நாங்கள் வளர்ச்சியை நோக்கி செல்கிறோம். மக்களும் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். எனவே, மகாராஷ்டிராவில் 'மகாயுதி' கூட்டணி 40 இடங்களுக்கும் மேல் வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன்.
இரட்டை இன்ஜின் ஆட்சி: நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு மகாராஷ்டிரா மாநிலம், அந்நிய நேரடி முதலீட்டில் முதல் இடத்தை பிடித்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நாங்கள் பெரும் பங்களிப்பை வழங்கி உள்ளோம். மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக தலைமையிலான அரசு செயல்படுவதால் மகாராஷ்டிரா மாநிலமானது வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்கிறது" என்று தமது பேட்டியில் ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “வீட்டில் இருந்துகொண்டு பேஸ்புக்கில் லைவ் போடும் முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேக்கு மக்கள் வாக்களிக்கமாட்டார்கள். களத்தில் இறங்கி வேலை செய்யும் அரசாங்கத்தை தான் மக்கள் விரும்புவார்கள்.
மேலும், நாங்கள் ஆட்சி பொறுப்பேற்ற பின் பல திட்டங்களைச் செயல்படுத்தி உள்ளோம். பெண்களுக்கான ’லெக் லடாகி’ திட்டம் (Lek Ladaki), அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 50% பயண சலுகை, ஸ்டார்ட் அப் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களைச் செயல்படுத்தி உள்ளோம்.
அதனால் மீண்டும் எங்கள் தலைமையிலான ஆட்சி தான் அமைய வேண்டும் என்று மக்கள் விரும்புவார்கள். எதிர்க்கட்சிகளுக்குப் பேசுவதற்கு எதுவும் இல்லை. அவர்களால் வளர்ச்சி பற்றி பேச முடியாது. கடந்த 50, 60 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றி சிந்திக்கவில்லை. அரசியலமைப்பு தினத்தை தொடங்கி வைத்தவர் பிரதமர் மோடி. அம்பேத்கரை தோற்கடித்தது காங்கிரஸ் தான்.
மோடி இந்தியாவை வல்லரசாக்குவார்: நாடு வல்லரசாக மாறுவதையும், நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதையும் பிரதமர் மோடி உறுதி செய்வார். ஆனால், காங்கிரஸ் என்ன செய்கிறது? வெளிநாட்டில் நம் நாட்டை இழிவுப்படுத்துகிறார்கள், இது தேசபக்தியா? காங்கிரஸ் கட்சியினர் மோடியை தோற்கடிக்க நினைக்கிறார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சியினர் கடந்த 2014 ஆம் ஆண்டு தோற்கடிக்கப்பட்டனர்" என்று ஷிண்டே கூறினார்.
'காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பாஜக தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்' என ராகுல் காந்தி கூறிவருகிறாரே என்ற கேள்விக்கு, ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும் என யாரும் கனவில் கூட நினைக்கமாட்டார்கள் என்று ஷிண்டே பதிலளித்துள்ளார்.
ராகுல் காந்தி பிரதமராவது சாத்தியமல்ல. பாரத் ஜோடோ யாத்திரை என வெளிநாடுகளுக்கு ராகுல் காந்தி ஓடுகிறார். ஆனால், பிரதமர் மோடி ஒருநாள் கூட விடுப்பு எடுத்ததில்லை. கடந்த 10 ஆண்டுகளாக நாட்டுக்காக தன்னை அர்ப்பணித்துள்ளார் என்று ஷிண்டே கூறினார்.
புனே போர்ஷே விபத்து குறித்த கேள்விக்கு, "இந்த வழக்கில் கடுமையான நடவடிக்கை எடுக்க புனே கமிஷ்னருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சட்டத்தின் முன் அனைவரும் சமம். நான் புனே கமிஷனரை அழைத்து இந்த வழக்கில் யாரும் தப்பிக்கக் கூடாது. குற்றவாளிகள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட வேண்டும்" என கூறியுள்ளேன் என்று ஷிண்டே் தமது பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: வீடியோ வெளியிட்ட பிரஜ்வல் ரேவண்ணா! விசாரணைக்கு ஆஜராவேன் என உறுதி.. - Prajwal Revanna Sexual Videos Issue