வயநாடு : பிரதமர் மோடி பிரபல நியூஸ் ஏஜென்சியான ஏஎன்ஐ-க்கு (ANI) பேட்டி அளித்தார். அதில், தேர்தல் பத்திர விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் பரப்பி வருவதாகவும், தேர்தல் பத்திர திருத்த சட்டம் ரத்து செய்யப்பட்டதால் ஏற்படும் பின்வுளைவுகளுக்கு அனைவுரும் வருந்துவார்கள் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, "தேர்தல் பத்திரத்தில் மிக முக்கியமானது பெயர் மற்றும் நன்கொடை வழங்கப்பட்ட தேதி. தேர்தல் பத்திரத்தில் உள்ள பெயர் மற்றும் தேதிகளை கவனமாக பார்த்தால் எப்போது நன்கொடையாளர்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கினார்கள் என்ற விவரம் தெரியவரும்.
அதன்படி எப்போது அந்த ஒப்பந்தம் வாங்கப்பட்டது அல்லது சிபிஐ விசாரணை குறிப்பிட்ட நிறுவனம் மீது எப்போது கைவிடப்பட்டது என்பது தெரியவரும். அங்கேயே பிரதமர் மோடி மாட்டிக் கொண்டார். அதனால் தான் அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி வழங்கி உள்ளார். உலகின் மிகப் பெரிய மிரட்டி பணம் பறிக்கும் திட்டம் தேர்தல் பத்திரம், அதன் பின்னணியில் பிரதமர் மோடி மூளையாக செயல்பட்டு உள்ளார்" என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
மேலும் தேர்தல் பத்திரம் மூலம் பாஜக பணம் பெற்றதுமே அந்த பத்திரம் வழங்கிய நன்கொடையாளர்களுக்கு பெரிய ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். ஒரு நிறுவனத்திற்கு எதிராக சிபிஐ விசாரணை தொடங்கப்பட்ட நிலையில், தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை பெற்ற மறுநாளே அந்த நிறுவனத்தின் மீதான விசாரணை கைவிடப்படுவது எப்படி என்பது குறித்து பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்ப வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்தார்.
நன்கொடையாளர்கள் பணம் வழங்கியது அவர்களுக்கு பெரிய ஒப்பந்தங்கள், உள்கட்டமைப்பு சார்ந்த ஒப்பந்தங்கள் உடனடியாக வழங்கப்படுகின்றன. இதுதான் மிரட்டி பணம் பறிக்கும் திட்டத்தின் உண்மைக் கதை. இதன் பின்னால் பிரதமர் மோடி மூளையாக செயல்படுகிறார் என்று ராகுல் காந்தி கடுமையாக சாடினார்.
முன்னதாக பிரதமர் மோடி, தேர்தல் பத்திரம் திட்டத்தின் நோக்கமே கருப்பு பணம் புழக்கத்தை முடக்குவது என்றும் இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை தெரிவித்து விட்டு ஓடி ஒளிந்து கொள்கின்றன என்றும் தெரிவித்தார். மேலும், புலனாய்வு அமைப்புகளின் விசாரணை வளையத்தில் சிக்கிய 16 நிறுவனங்கள் வழங்கிய நன்கொடையில் 37 சதவீதம் மட்டுமே பாஜகவுக்கு வழங்கப்பட்டதாகவும், மீதமுள்ள 67 சதவீதம் எதிர்க்கட்சிகள் பெற்றதாகவும் பிரதமர் மோடி தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : "தேர்தல் பத்திர விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம்.. அனைவரும் வருந்துவர்" - பிரதமர் மோடி! - Lok Sabha Election 2024