டெல்லி: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறும். மனு தாக்கல் இன்னும் 5 நாட்களில் அதாவது மார்ச் 20 ல் துவங்கும். மனு தாக்கல் மார்ச் 27ம் தேதி முடிவடையும். வேட்பு மனு பரிசீலனை மார்ச் 28 முடிவடையும். வேட்புமனுவைத் திரும்பப் பெற கடைசி நாள் மார்ச் 30ம் தேதி. வாக்குப்பதிவு தேதி ஏப்ரல் 19ம் தேதி. அனைத்து கட்ட தேர்தல் முடிவுகளும் ஜூன் 4ம் தேதி அறிவிக்கப்படும். மக்களவை தேர்தலுடன் சேர்த்து காலியாக உள்ள விளவங்கோடு சட்டப்பேரவைக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், "நாட்டின் உண்மையான பண்டிகை, ஜனநாயக சூழலை வழங்க உறுதி கொண்டுள்ளோம். 17வது மக்களவையின் பதவிக் காலம் ஜூன் 16ஆம் தேதி முடிவடைகிறது. ஆந்திரபிரதேசம், ஒடிசா, அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டப் பேரவைகளின் பதவிக் காலமும் ஜூன் மாதத்துடன் நிறைவு பெற உள்ளது. விரைவில் ஜம்மு மற்றும் காஷ்மீரில் தேர்தல் நடைபெற உள்ளது.
நாடு முழுவதும் 5 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும், 55 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. நாடு முழுவதும் 10 புள்ளி 5 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் 1 புள்ளி 5 கோடி ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.
நாட்டில் 97 லட்சம் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 1.82 கோடி முதல் முறை வாக்காளார்கள் இந்த முறை வாக்களிக்க உள்ளனர். நாடு முழுவதும் 49 புள்ளி 7 கோடி ஆண் வாக்காளர்கள் மற்றும் 47 புள்ளி 1 கோடி பெண் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் முதல் தலைமுறை வாக்காளர்கள் 1 புள்ளி 8 கோடி பேர் உள்ளனர்.
வாக்காளர்களுக்கு தேவையான கழிவறை, வீல் சேர் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய வசதிகளும் நாடு முழுவதும் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் ஏற்படுத்தப்படும். 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் விரும்பும்பட்சத்தில் வீட்டில் இருந்தே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : நாடாளுமன்ற தேர்தல்: காங்கிரஸ் 5 வாக்குறுதிகள் அறிவிப்பு! என்னென்ன தெரியுமா?