டெல்லி: கடந்த 2013 முதல் 2018 வரையிலான முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்த டிகே சிவகுமார் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதி சொத்து குவிப்பு வழக்கில் டிகே சிவக்குமாருக்கு எதிராக சிபிஐ எப்ஐஆர் பதிவு செய்தது. இந்நிலையில், சிபிஐயின் எப்ஐஆரை எதிர்த்து 2021ஆம் ஆண்டு டிகே சிவகுமார் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி சிபிஐயின் எப்ஐஆரை எதிர்த்து சிவகுமார் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த கர்நாடக உயர் நீதிமன்றம் மூன்று மாதத்திற்கு விசாரணையை நிறைவு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டது.
இந்நிலையில், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து டிகே சிவகுமார் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பீலா எம் திரிவேதி, எஸ் சி சர்மா ஆகியோரது அமர்வில் விசாரணைக்கு வந்தது. கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், டிகே சிவகுமாரின் மனிவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் டிகே சிவகுமார் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி வருமான வரித்துறை அதிகாரிகள் 41 லட்ச ரூபாய் பணம் உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்பட்டது. தொடர்ந்து 2019ஆம் ஆண்டு பாஜக தலைமையிலான கர்நாடக அரசு பரிந்துரையின் பேரில் 2020ஆம் ஆண்டு டிகே சிவகுமாருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை சிபிஐ பதிவு செய்தது.
இந்நிலையில் கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டிகே சிவகுமார் மீதான புகாரை தற்போதைய காங்கிரஸ் அரசு திரும்பப் பெற்றது. மேலும் இந்த புகார் தொடர்பாக கர்நாடக லோக் ஆயுக்தா விசாரணை நடத்துமாறும் மாநில அரசு பரிந்துரை செய்தது குறிப்பிடத்தகக்து. இதனிடையே தான் சிபிஐ கர்நாடக உயர் நீதிமன்றத்தை நாடி சிவகுமாருக்கு எதிரான எப்ஐஆர் பதிவு செய்தது.
இதையும் படிங்க: கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த இந்தூர் நகரம்! என்ன காரணம் தெரியுமா? - Indore city sets Guinness record