மும்பை: தெற்கு மும்பையில் உள்ள ஆசாத்மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில் மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சராக தேவேந்திர பட்நாவிஸ் முதலமைச்சராக பதவி ஏற்றார்.
மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் மகாயுதி கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாஜக 132 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சிவசேனா 57 தொகுதியிலும், தேசியவாத காங்கிரஸ் 41 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதையடுத்து மகாயுதி கூட்டணியில் யார் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார் என்பது குறித்து மும்பையிலும், டெல்லியிலும் ஆலோசனைகள் நடைபெற்றன.
பிரதமர் நரேந்திர மோடி பங்கற்பு: இதனைத் தொடர்ந்து மும்பையில் நேற்று நடைபெற்ற பாஜக மத்திய குழு கூட்டத்தில் முதலமைச்சராக தேவேந்திர பட்நாவிஸ் தேர்ந்தெடுக்கப் பட்டார். முதலமைச்சராக பதவி ஏற்கும் முன்பு மும்பையில் உள்ள ஸ்ரீ சித்திவிநாயகர் கோவிலில் வழிபாடு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து இன்று மாலை 5.30 மணிக்கு தெற்கு முன்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. பதவி ஏற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா,மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீத்தாராமன், நிதின் கட்கரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பட்நாவிஸ் பதவி ஏற்பு விழாவில் உபி முதலமைச்சர் யோகி ஆதித்தியா நாத், குஜராத் முதலமைச்சர் பூபேந்திர பாட்டில், ஹரியானா முதலமைச்சர் நாயாப் சிங் சைனி, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாலிவுட் நட்சத்திரங்களான ஷாரூக் கான், சல்மான் கான், சஞ்சய் தத், மாதுரி தீட்சித், கிரிக்கெட் பிரபலம் சச்சின் டெண்டுல்கர், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் முகேஷ் அம்பானி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: துணை முதலமைச்சர் பதவியில் இருந்து முதலமைச்சர் வரை...தேவேந்திர பட்நாவிஸின் அரசியல் பயணம்!
பதவி பிரமாணம்: பதவி ஏற்பு விழாவுக்கு வருகை தந்த ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனுக்கு தேவேந்திர பட்நாவிஸ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதனைத்தொடர்ந்து பதவி ஏற்பு விழா தொடங்கியது. முதலமைச்சராக பதவி ஏற்கும் முன்பு பிரதமர் மோடி, தேவேந்திர பட்நாவிஸுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தார். முதலில் தேவேந்திர பட்நாவிஸுக்கு முதலமைச்சராக ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். தேவேந்திர பட்நாவிஸ் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள நாக்பூர் தெற்கு மேற்கு தொகுதியில் வெற்றி பெற்று எம்ஏல்ஏ ஆனவராவார்.
இதனையடுத்து துணை முதலமைச்சர்களாக ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவார் ஆகியோர் பதவி ஏற்றனர். அஜித் பவார் ஆறாவது முறையாக துணை முதலமைச்சராக பதவி ஏற்றார். இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் பிரதமர் நரேந்திர மோடியிடம் மேடையிலேயே வாழ்த்துப் பெற்றனர். முதலமைச்சர், துணை முதலமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளின் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல பிற அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா தனியாக நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. மகாராஷ்டிரா முதலமைச்சரின் பதவி ஏற்பு விழாவில் 4,000த்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.