டெல்லி : தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ் கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி ஸ்ரீசிலா பகுதியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் காங்கிரஸ் கட்சி குறித்து அவதூறாக பேசியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி காங்கிரஸ் கட்சி குறித்து சந்திரசேகர ராவ் அவதூறாக பேசியதாக தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.நிரஞ்சன் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகார் குறித்து ரஞ்சன்னா ஸ்ரீசிலா மாவட்ட தேர்தல் அதிகாரி சார்பில் தேர்தல் ஆணையத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, காங்கிரஸ் கட்சி குறித்து அவதூறு கருத்து வெளியிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் வழங்கி உள்ளது.
வரும் ஏப்ரல் 18ஆம் தேதி காலை 11 மணிக்குள் புகார் தொடர்பாக அறிக்கை அளிக்காத பட்சத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியது தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த மார்ச் மாதம் 16ஆம் தேதி மக்களவை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
அன்றிலிருந்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதுவரை பாரதிய ஜனதா கட்சி சார்பில் 51 புகார்கள் வழங்கப்பட்டு உள்ள நிலையில், அதில் 38 வழக்குகளுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், காங்கிரஸ் தரப்பில் வழங்கப்பட்ட 59 புகார்களில் 51 வழக்குகளுக்கு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
இதுதவிர மற்ற கட்சிகள் வழங்கிய 90 புகார்களில் 80 வழக்குகளுக்கு நடவடிக்கை எடுத்து உள்ளதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
இதையும் படிங்க : இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் காரசார விவாதம்! - Lok Sabha Election 2024