டெல்லி : மதுபான கொள்கை முறைகேடு வழக்கு குறித்து விசாரிக்க தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகளும் எம்எல்சியுமான கவிதாவை சிபிஐ காவலில் எடுத்து உள்ளது. கடந்த புதன்கிழமை (ஏப்.10) மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள கவிதாவிடம் விசாரணை நடத்தியதாக சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது.
தலைநகர் டெல்லியில் மதுபான கொள்கை வகுத்ததில் தனியாருக்கு லாபம் ஏற்படும் வகையில் 100 கோடி ரூபாய் வரை முறைகேடு செய்ததாக தொடர்புடைய சவுத் குரூப் நிறுவனத்தின் முக்கிய நபர் கவிதா என நீதிமன்றத்தில் சிபிஐ குற்றம் சாட்டி உள்ளது. இது தொடர்பாக கவிதாவிடம் கேள்விகள் கேட்க அனுமதிக்குமாறு சிபிஐ முறையிட்டது.
இதையடுத்து மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தெலங்கானா பாரத ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் எம்எல்சி கவிதாவை விசாரிக்க சிபிஐ காவலில் எடுத்து உள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கவிதாவை கடந்த மார்ச் 15ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. இந்த வழக்கு தொடர்பாக கவிதாவை 7 நாட்கள் விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
தொடர்ந்து, மேலும் 3 நாட்களுக்கு அமலாக்கத் துறை காவலில் விசாரிக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது. அமலாக்கத் துறை காவல் முடிந்து மார்ச் 26ஆம் தேதி கவிதா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், ஏப்ரல் 9ஆம் தேதி வரை காவலை நீடித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கவிதா டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
கவிதாவின் நீதிமன்ற காவல் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், அமலாக்கத் துறை அவரை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தியது. அப்போது கவிதாவின் காவலை மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்க அமலாக்கத் துறை சார்பில் கோரப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஏப்ரல் 23ஆம் தேதி வரை காவலை நீடித்து உத்தரவிட்டார்.
ஏற்கனவே மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின் ஆகியோர் சிறையில் உள்ளனர். இதனிடையே டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இதையும் படிங்க : டெல்லி ஆம் ஆத்மி அமைச்சர் ராஜினாமா? என்ன காரணம்? பாஜகவில் இணைய திட்டமா? - Lok Sabha Election 2024