புதுடெல்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிபிஐயால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த தொழிலதிபர் அமந்தீப் சிங் தாலுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
டெல்லி மாநில அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சஞ்சய் சிங், பாரத ராஷ்ரிய சமிதி கட்சியை சேர்ந்த கவிதா, தொழிலதிபர் அமந்தீப் சிங் தால் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவர் மீதும் அமலாக்கத்துறை சார்பிலும், சிபிஐ சார்பிலும் தனித்தனியே வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் இருந்து ஏற்கனவே அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா,சஞ்சய் சிங், கவிதா ஆகியோர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் அமலாக்கத்துறையால் தொடரப்பட்ட பண மோசடி வழக்கில் தொழிலதிபர் அமந்தீப் சிங் தால் ஏற்கனவே ஜாமீன் பெற்று விட்டார். ஆனால், சிபிஐ தொடர்ந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. சிபிஐ வழக்கில் ஜாமீன் தருமாறு தொழிலதிபர் அமந்தீப் சிங் தால் தாக்கல் செய்த மனுவை கடந்த ஜூன் 4ஆம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இதையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இதையும் படிங்க: சிபிஐ வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்.. சிறையில் இருந்து வெளியே வருவது எப்போது?
அவரது ஜாமீன் மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யா காந்த், உஜ்ஜால் புயான் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அமந்தீப் சிங் தாலுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். அப்போது கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், "சிபிஐ வழக்கில் 300 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். எனவே இந்த வழக்கின் விசாரணை இப்போதைக்கு முடிவடையாது.குற்றம் சாட்டப்பட்டுள்ள அமந்தீப் சிங் தால் 500 நாட்களுக்கும் மேல் சிறையில் இருக்கிறார். மேலும் அவர் சிறையில் இருப்பது எந்த நோக்கத்துக்கும் உதவாது.சிபிஐ தரப்பில் சாட்சிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதை காட்டிலும், சாட்சிகளின் தரம் குறித்து கவனம் செலுத்த வேண்டும்"என்றனர்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவில்,"ஜாமீனில் விடுவிக்கப்படுவதன் மூலம் மதுபான கொள்கை முறைகேடு வழக்கின் தகுதி குறித்து தீர்மானிப்பதாக ஆகாது. மேலும், இந்த ஜாமீன் உத்தரவு என்பது விசாரணை நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைக்கு உட்பட்டது,"என்றும் கூறப்பட்டுள்ளது.இப்போது ஜாமீன் பெற்றுள்ள தொழிலதிபர் அமந்தீப் சிங் தால் என்பவர், டெல்லி மதுபான கொள்கையை உருவாக்குவதில் முக்கிய நபராக செயல்பட்டார் என்று சிபிஐ கூறியுள்ளது. மேலும் மதுபான கொள்கையை சாதகமாக உருவாக்கியதன் மூலம் ஆம் ஆத்மி கட்சி, லாபியில் ஈடுபட்ட தெற்கு குழு ஆகியவற்றுக்கு முறைகேடாக பணம் கொடுத்ததாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்