டெல்லி: டெல்லியின் 8-வது முதலமைச்சராக ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவர் அதிஷி இன்று பதவியேற்றுக் கொண்டார். அவர் தனது தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அமர்ந்திருந்த நாற்காலியில் அமர்வதை தவிர்த்து, அருகில் வைக்கப்பட்ட வெள்ளை நிற நாற்காலியில் அமர்ந்து பணிகளை தொடங்கினார்.
கடந்த சனிக்கிழமை டெல்லி முதல்வராக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட அதிஷி, தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று பொறுப்பேற்று பணிகளை துவங்கினார். டெல்லி சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 26, 27ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
முதல்வராக பொறுப்பேற்றதும், எக்ஸ் தளத்தில் அதிஷி ஒரு பதிவை வெளியிட்டார். அதில் அவர், "இன்று டெல்லி முதல்வர் பொறுப்பை ஏற்றுள்ளேன். ராமபிரான் 14 ஆண்டுகள் வனவாசம் சென்றபோது, அயோத்தியின் ஆட்சியை பரதன் கவனிக்க நேர்ந்தபோது அவர் அடைந்த அதே வலி இன்று என் இதயத்தில் இருக்கிறது.
आज मैंने दिल्ली के मुख्यमंत्री की ज़िम्मेदारी सँभाली है। आज मेरे मन में वो ही व्यथा है जो भरत के मन में थी जब उनके बड़े भाई भगवान श्री राम 14 साल के वनवास पर गए थे, और भरत जी को अयोध्या का शासन सँभालना पड़ा था। जैसे भरत ने 14 साल भगवान श्री राम की खड़ाऊँ रख कर अयोध्या का शासन… pic.twitter.com/OkNEgtYIq4
— Atishi (@AtishiAAP) September 23, 2024
அயோத்தியை பரதன் 14 ஆண்டுகள் ஸ்ரீராமரின் காலணிகளை வைத்து ஆட்சி செய்தது போல், டெல்லியில் 4 மாதங்கள் ஆட்சி நடத்துவேன்." என குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்தப் பதிவில், கெஜ்ரிவால் பயன்படுத்திய நாற்காலியின் அருகில் வேறு நாற்காலியில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தையும் முதல்வர் அதிஷி பகிர்ந்துள்ளார்.
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை, சிபிஐ ஆகிய விசாரணை அமைப்புகளால் முதல்வராக இருந்த கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இரு வழக்குகளிலும் ஜாமீன் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து, தொடர்ந்து முதல்வர் பணியை கெஜ்ரிவால் கவனிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில், மக்கள் மன்றத்தில் தீர்ப்பு கிடைக்காமல் முதல்வர் நாற்காலியில் அமரமாட்டேன் என கூறி பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்தே ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் அதிஷி முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.
கெஜ்ரிவால் அரசாங்கத்தில் கல்வி, வருவாய்த் துறை, நிதி, மின்சாரம் மற்றும் பொதுப்பணித்துறை உள்ளிட்ட 13 இலாகாக்களை அதிஷி கவனித்து வந்தார். தற்போதும் இதே துறைகளை அவர் தன்வசம் வைத்துக் கொண்டுள்ளார். அதிஷிக்கு அடுத்தபடியாக 8 இலாகாக்களை கொண்டுள்ள சவுரப் பரத்வாஜும் கடந்த சனிக்கிழமை பதவியேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.