டெல்லி: நாடு முழுவதும் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மூன்று கட்டங்களாக ஏறத்தாழ 286 தொகுதிகளுக்கு மக்களவை தேர்தல் நடைபெற்ற நிலையில், நாளை (மே.13) 4வது கட்ட மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், மக்களவை தேர்தல் வாக்குறுதிகளை டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, 24 மணிநேரமும் மின் விநியோகம், நல்ல கல்வி, சுகாதாரா உள்கட்டமைப்புகள், ஒவ்வொரு ஆண்டும் இளைஞர்களுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க ஒன்றிணைந்து பணியாற்றுவது, அக்னி வீர் திட்டம் ரத்து, சுவாமிநாதன் ஆணையத்தின் அறிக்கைபடி விவசாயிகளுக்கு பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை, ராஷ்டிர சர்வபூரி திட்டம், சீனா ஆக்கிரமிப்பு செய்த நிலங்களை மீட்டெடுப்பது உள்ளிட்ட உத்தரவாதங்களை வெளியிட்டார்.
இதுதொடர்பாக பேசிய அவர், மக்களவை தேர்தல் முடிவில் இந்தியா கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் என்றும் அதில் ஆம் ஆத்மி கட்சி அங்கம் வகிக்கும் என்றும் தெரிவித்தார். மோடியின் உத்தரவாதமா அல்லது கெஜ்ரிவாலின் உத்தரவாதமா என மக்கள் தேர்வு செய்யட்டும் என்று கூறினார். தேர்தல் வாக்குறுதிகள் குறித்து இந்தியா கூட்டணி தலைவர்களுடன் தான் ஆலோசனை மேற்கொள்ளவில்லை என்றும் அதேநேரம் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்ததும் இந்த உத்தரவாதங்களை நிறைவேற்றக் கோரி ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
டெல்லி மற்றும் பஞ்சாப்பில் 24 மணி நேரம் மின் விநியோகம், தரமான கல்வி, சுகாதார வசதிகள் முறையாக வழங்கப்பட்டு உள்ளதாகவும் அதேபோல் நாடு முழுவதும் வழங்க ஆம் ஆத்மி கட்சி போராடும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். மேலும், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு உள்ளதாகவும், ஆனால் பிரதமர் மோடி தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான பண மோசடி வழக்கில் இடைக்கால ஜாமீனில் வெளிவந்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்களுடான் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். தொடர்ந்து ஜூன் 2ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் நிறைவு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: “விவாதத்தில் கலந்து கொள்ளத் தயார்” - காங்கிரஸ் ஏற்பு.. பாஜகவின் பதில் என்ன? - Congress Accepts Invite