புதுடெல்லி: தீபாவளி பண்டிகையன்று வெடிக்கப்பட்ட பட்டாசு புகையால் டெல்லி கடுமையான காற்று மாசுவை எதிர்கொண்டது. ஆனால், பண்டிகை முடிந்து 14 நாட்கள் ஆன நிலையில் டெல்லி கடுமையான காற்று மாசு குறியீட்டை பதிவு செய்துள்ளது. மத்திய காற்று மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தரவுகளின்படி, டெல்லியில் கடந்த புதன்கிழமை காற்று தர குறியீடு (AQI) 428 ஆக பதிவாகியுள்ளது.
பொதுவாக காற்று தர குறியீடு 50க்கும் இடைப்பட்ட அளவில் இருப்பது சுகாதாரமான சூழலுக்கான அறிகுறியாகும். 51 மற்றும் 100க்கு இடைப்பட்ட அளவு திருப்திகரமானது. 101 மற்றும் 200 அளவானது மிதமானதாக எடுத்துக்கொள்ளப்படும். 201 மற்றும் 300-க்கும் இடையே இருந்தால் மோசமான காற்று தர குறியீடாகும். 301 மற்றும் 400 (AQI) அளவானது மிகவும் மோசமான காற்று மாசு குறியீடாகும்.
ஆனால், டெல்லியில், கடந்த 24 மணி நேரத்தில் பதிவான அளவு 428 என்பதால் டெல்லி இந்தியாவிலேயே கடுமையான காற்று மாசு பதிவான நகரமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சுவாச பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். காற்று மாசுவுடன் சேர்ந்து மூடு பனி சூழ்ந்துள்ளதால் டெல்லியில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜார்க்கண்ட் முதல்கட்ட தேர்தல் நிறைவு.. 64.86 சதவீத வாக்குகள் பதிவு!
சுவாச பிரச்சனையால் மக்கள் அல்லல்
கடுமையான காற்று மாசுவால் டெல்லியில் தினசரி பயணிகள் மற்றும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் சுவாச பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி பள்ளி மாணவன் ரவுனக் கூறுகையில், '' அதிகப்படியான மாசு காரணமாக தனக்கு தொடர்ந்து இருமல் வருகிறது. இருப்பினும், பள்ளிக்கு சென்று வருகிறேன். இது என் நுரையீரலையும் பாதிக்கலாம். சிஎன்ஜி வகையான வாகனங்களை மக்கள் பயன்படுத்தினால் காற்று மாசுபடுவதை கட்டுப்படுத்தலாம்... ஆனால், மக்களிடம் ஒத்துழைப்பு இல்லை'' என்றார்.
மற்றொரு உள்ளூர்வாசியான பிரதீக், பார்வைத் திறன் குறைந்துவிட்டதாகவும், மக்கள் மூச்சுத் திணறலை உணர ஆரம்பித்ததாகவும் கூறினார். மேலும், காற்று மாசு மற்றும் பனி மூட்டத்தால் சாலை தெரிவதில்லை.. வெளியே சென்றாலே எங்கள் கண்கள் எரிகின்றன, இதற்கு அரசாங்கம் ஏதாவது செய்ய வேண்டும்" என்று கூறினார்.
புற்றுநோய் ஆபத்து:
ராஜீவ் காந்தி கேன்சர் இன்ஸ்டிடியூட் மற்றும் ரிசர்ச் சென்டரின் தலைவரான எல்.எம் டார்லாங் அதிர்ச்சிகர தகவலை கூறியுள்ளார். மேலும், காற்று மாசுவில் உள்ள PM2.5 நுண்ணிய துகள்கள் நுரையீரல் புற்றுநோய்க்கு வழி வகுக்கும் என்றார். மேலும், காற்று மாசுவில் உள்ள நுண்ணிய துகள்கள் நுரையீரல் செல்களில் பிறழ்வுகளைத் தூண்டி, கட்டுப்பாடற்ற செல் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் எனவும் நுரையீரல் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவது முக்கியமானது எனவும் தெரிவித்தார். ஆனால், இந்த பிரச்சனையை நோயாளிகள் முன்கூட்டியே அறிய மாட்டார்கள் என்றும் நோய் தீவிரமான பிறகே தொடர்ச்சியான இருமல் அல்லது சளியில் இரத்தம் போன்ற அறிகுறிகள் தென்படும் என்றார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்