ஐஸ்வல்: மிசோரம் மாநிலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்தனர். இதுவரை 21 பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், தொடர்ந்து காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், கொலசிப் மாவட்டத்தில் உள்ள ட்லாங் ஆற்றில் பெண்ணின் சடலத்தை மீட்புக் குழுவினர் மீட்டனர்.
அதைத் தொடர்ந்து ஹர்டோகி, ஐஸ்வல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்களின் சடலங்கள் நிலச்சரிவில் இருந்து மீட்கப்பட்டு உள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஐஸ்வால் மாவட்டத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் நிலச்சரிவில் சிக்கி காணாமல் போன நிலையில், அதில் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டு உள்ள நிலையில், 6 மாத குழந்தை உள்பட மீதமுள்ளவர்களின் சடலங்களை மீட்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், மீட்கப்பட்ட சடலங்களில் ஜார்கண்ட் மற்றும் அசாம் மாநிலத்தில் இருந்து பிழைப்பு தேடி வந்த 8 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த மிசோரம் முதலமைச்சர் லால்துஹோமா உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு தலா 4 லட்ச ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். ரெமல் சூறாவளியால் கொட்டித் தீர்த்த கனமழை மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பேரிடர்களை சமாளிக்க மாநில அரசு 15 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னை இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! வானில் நடந்த களேபரம்!