டெல்லி: தமிழகத்துக்கு நிலுவையில் உள்ள காவிரி நீரை கர்நாடக அரசு திறந்துவிட உத்தரவிட வேண்டும் எனக் கோரி, தமிழக அரசு காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழுவுக்கு கோரிக்கை வைத்திருந்தது. இதுதொடர்பாக டெல்லியில் நடந்த 96வது கூட்டத்திற்கு காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு தலைவர் வினீத் குப்தா தலைமை தாங்கினார்.
ஆன்லைன் வாயிலாக நடந்த இந்த கூட்டத்தில் இரு மாநில அதிகாரிகளும் பங்கேற்றனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த ஒழுங்காற்றுக் குழு, “இரு மாநிலங்களும் அதன் குடிநீர்த் தேவைகளை பூர்த்தி செய்யத் தேவையான நீர்த்தேக்கங்களில் போதுமான அளவு தண்ணீர் உள்ளது'' என்று தெரிவித்து, தமிழகத்தின் கோரிக்கையை நிராகரித்தது. மேலும், மாநிலங்களின் குடிநீர் தேவைக்கு முன்னுரிமை அளிக்கவும் அக்குழு உத்தரவிட்டுள்ளது.
மேலும், காவிரிப் படுகையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கோடை மழையால், காவிரி கரையோர மாநிலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு குறைந்துள்ளது என்றும், நாளொன்றுக்கு 150 கன அடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருந்த பிலிகுண்டுலுவுக்கு கடந்த 5 நாட்களாக தினமும் 1,100 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது எனவும் கமிட்டி சுட்டிக் காட்டியுள்ளது.
அத்துடன், உச்ச நீதிமன்றத்தால் மாற்றியமைக்கப்பட்ட காவிரி நதிநீர்ப் பங்கீடு தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பின்படி, சுற்றுசூழலுக்கு தடையின்றி காவிரி நீர் ஓட்டத்தைப் பராமரிக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் வினீத் குப்தா தெரிவித்தார்.
முன்னதாக, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் கூட்டங்களில் நேரில் கலந்து கொள்ளக்கூடாது என்றும், ஆன்லைன் மூலம் மட்டுமே நடத்த வேண்டும் என்றும் நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில், அப்படியான எந்த உத்தரவையும் அரசு பிறப்பிக்கவில்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதையும் படிங்க: மேற்கு வங்கத்தில் மின்னல் தாக்கியதில் ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த 12 பேர் உயிரிழப்பு - மம்தா பானர்ஜி இரங்கல்!