டெல்லி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு 72 வயதாகிறது. இவருக்கு கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சுவாச தொற்று பிரச்சனையால் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஏற்கனவே உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சையில் சேர்ந்த சீதாராம் யெச்சூரிக்கு உடல்நிலை மேலும் மோசமானதால் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். தற்போதும் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால் அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
கடந்த மாதம் 19 ஆம் தேதி மார்பு நோய்த்தொற்று சிகிச்சையும் யெச்சூரிக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அண்மையில் கண்புரை அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மருத்துவமனையில் தற்போது ஆபத்தான நிலையில் உள்ள யெச்சூரிக்கு ஏழு மருத்துவர்கள் கொண்ட குழுவின் பராமரிப்பில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இருப்பினும், அவரது நோயின் சரியான தன்மை குறித்து மருத்துவமனை தரப்பில் இருந்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
அரசியலில் பல சகாப்தங்களை கடந்துள்ள சீதாராம் யெச்சூரி, 2004 இல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி அமைத்ததில் முக்கிய பங்காற்றியவர். 1974 ஆம் ஆண்டு இந்திய மாணவர் கூட்டமைப்பில் உறுப்பினராக சேர்ந்த இவர் அடுத்த ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். 1975 - 1977 ஆண்டுகளில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவராக இருந்த சீதாராம் யெச்சூரி எமர்ஜென்சியின் போது கைது செய்யப்பட்டார். 1977-78ல் மூன்று முறை ஜேஎன்யு மாணவர் சங்கத்தின் தலைவராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: கட்சித் தாவினால் பென்ஷன் கட்.. எம்.எல்.ஏக்களுக்கு செக் வைத்து மசோதா.. ஹிமாச்சல் அரசு அதிரடி