துலே: ஏழை பெண்களுக்கு 1 லட்ச ரூபாய், அரசு வேலையில் 50 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட 5 உத்தரவாதங்களை மகிளா மெளவா பேரணியில் ராகுல் காந்தி தெரிவித்தார். மகாராஷ்டிர மாநிலம் துலேவில் காங்கிரஸ் கட்சியில் மகிளா மெளவா பேரணி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பேரணியில் பேசிய ராகுல் காந்தி மகளிர் நியாய உத்தரவாதங்கள் என்ற தலைப்பில் 5 உத்தரவாதங்களை காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியதும் நிறைவேற்றப்படும் என்று அறிவித்தார். அவை,
1. மகாலட்சுமி: வறுமைக்கோட்டின் கீழ் உள்ள ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு 1 லட்ச ரூபாய்.
2. 50 சதவீத இடஒதுக்கீடு: புதிதாக அரசுப் பணியில் சேர விரும்பும் பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு.
3. இரட்டிப்பு சம்பளம்: அங்கன்வாடி, ஆஷா, மத்திய உணவு திட்டம் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் பெண்களுக்கு சம்பளம் இரட்டிப்பாக உயர்வு.
4. அதிகார் மைதிரி: ஒவ்வொரு பஞ்சாயத்திலும் பெண்களின் உரிமைகளை அவர்களுக்கு தெரியப்படுத்தவும் மற்றும் அதை அமல்படுத்தக் கூடிய வகையில் அதிகாரி நியமனம்.
5. மகளிர் விடுதிகள்: பணிக்கு செல்லும் பெண்கள் தங்கும் விடுதிகளை இரட்டிப்பாக்குவது மற்றும் மாவட்டத்திற்கு ஒரு விடுதி என்ற நிலையை உருவாக்குவது.
ஆகிய உத்தரவாதங்களை ராகுல் காந்தி அறிவித்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், மக்களவையில் பெரும் ஆரவாரத்துடன், பெண்களுக்கான இடஒதுக்கீட்டு சட்டத்தை நிறைவேற்றிய பிரதமர் மோடி, அதை 10 ஆண்டுகளுக்கு பிறகு மேற்கொள்ளப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பின் பெண்கள் அந்த இடஒதுக்கீட்டை அனுபவிக்க முடியும் வகையில் நிறைவேற்றி உள்ளார் என ராகுல் காந்தி கூறினார்.
ஆனால் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன், எந்த ஒரு கணக்கெடுப்பும், கால தாமதமும் இல்லாமல் பெண்களுக்கான இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று ராகுல் காந்தி கூறினார். பிரதமர் மோடி நாட்டின் பெரும் செல்வந்தர்களின் 16 லட்ச ரூபாய் கோடி கடன்களை தள்ளுபடி செய்து உள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் ஆண்டு பட்ஜெட் 65 ஆயிரம் கோடி ரூபாய் என்றும் ஏறத்தாழ 24 ஆண்டுகளின் பட்ஜெட் தொகைக்கு நிகரான பணத்தை செல்வந்தர்களின் 16 லட்ச கோடி ரூபாய் கடன் தொகையை பிரதமர் மோடி தள்ளுபடி செய்து உள்ளதாகவும் அவர் ராகுல் காந்தி கூறினார்.
பெரும் செல்வந்தர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டால், நாட்டின் சாமானியர்களான கூலித் தொழிலாளிகள், விவசாயிகள், சிறு வியாபாரிகளின் கடன் தொகையும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
இதையும் படிங்க : "தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை... மத்திய அரசு உத்தரவிட்டாலும்..."- சித்தராமையா!