டெல்லி: வருகிற 2024 மக்களவைத் தேர்தலையொட்டி, 39 பெயர்கள் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. இதன்படி, ராகுல் காந்தி வயநாடு தொகுதியிலிருந்து போட்டியிடுகிறார். மேலும், கே.சி.வேணுகோபால் கேரளாவின் ஆலப்புழாவிலும், சசி தரூர் திருவனந்தபுரத்திலும் போட்டியிடுகின்றனர். அதேபோல், சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சர் பூபேஷ் பாகல் ரஜ்னத்கோன் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
2024 நாடாளுமன்றத் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்படவுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று (மார்ச் 8) வெளியிட்டுள்ளது. பாஜகவைத் தொடர்ந்து, தற்போது காங்கிரஸ் கட்சி தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
காங்கிரஸ் தரப்பில் வெளியிடப்பட்ட 39 வேட்பாளர்களைக் கொண்ட பட்டியலின் படி, 9 மாநிலங்களுக்கான வேட்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சியில் இந்தியா கூட்டணியிலுள்ள ஆம் ஆத்மி, சமாஜ்வாதி கட்சி, தேசிய மாநாட்டு கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்ததையடுத்து, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதால், அடுத்தடுத்த வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடும்போது அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது அறிவித்துள்ள வேட்பாளர்கள் பட்டியலின்படி, கேரளாவில் 16 தொகுதிகளிலும், சத்தீஸ்கரில் 6 தொகுதிகளிலும், கர்நாடகாவில் 7 தொகுதிகளிலும், தெலங்கானாவில் 4 தொகுதிகளிலும், லட்சத்தீவு, மேகலாயா, நாகாலாந்து, சிக்கிம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் தலா 1 தொகுதிகளிலும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தமாக முதற்கட்ட அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ள 39 வேட்பாளர்களில் 24 வேட்பாளர் இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினம் மற்றும் பழங்குடியினம் மற்றும் சிறுபான்மை வகுப்பைச் சார்ந்தவர்கள், 15 வேட்பாளர்கள் பொதுப்பிரிவைச் சார்ந்தவர்கள் இடம் பெற்றுள்ளனர்.
பாஜக தரப்பில் 195 வேட்பாளர்களைக் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டது. இதன்படி, 17 மாநிலங்களுக்கான பட்டியலை வெளியிட்டு இருந்தது. இதன் அடிப்படையில், உத்தரப் பிரதேசத்தில் 51 தொகுதிகளிலும், மேற்கு வங்காளத்தில் 20 தொகுதிகளிலும், மத்தியப் பிரதேசத்தில் 24 தொகுதிகளிலும், குஜராத்தில் 15 தொகுதிகளிலும், ராஜஸ்தானில் 15 தொகுதிகளிலும், கேரளாவில் 12 தொகுதிகளிலும், சத்தீஸ்கரில் 11 தொகுதிகளிலும், தெலங்கானாவில் 9 தொகுதிகளிலும், அசாமில் 11 தொகுதிகளிலும், டெல்லியில் 5 தொகுதிகளிலும், ஜம்மு காஷ்மீரில் 2 தொகுதிகளிலும், உத்தராகண்டில் 3 தொகுதிகளிலும், அருணாச்சலப் பிரதேசத்தில் 2 தொகுதிகளிலும், கோவாவில் 1 தொகுதியிலும், திரிபுராவில் 1 தொகுதியிலும், அந்தமானில் 1 தொகுதியிலும், டையூ-டாமனில் 1 தொகுதியிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இருந்தனர்.
இதையும் படிங்க: "பிடித்திருந்தால் சேருங்கள்".. தவெக உறுப்பினர் சேர்க்கைக்கான இணைய முகவரி அறிமுகம்!