புது டெல்லி: டெல்லி சிறப்புப் பிரிவு போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் ரூ.2000 கோடி மதிப்புள்ள 560 கிலோ கோகோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் சம்பவம் முறியடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி சிறப்புப் பிரிவு கூடுதல் போலீஸ் கமிஷனர் பிரமோத் சிங் குஷ்வாகா, " போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக தெற்கு டெல்லியில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோகோயின் போதைப் பொருளை டெல்லி மற்றும் என்சிஆர் பகுதியில் விற்பதற்கு அவர்கள் திட்டமிட்டிருந்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்டுள்ள டெல்லி வசந்த விஹாரை சேர்ந்த துஷார் கோயல் , ஹிமான்சு, அவுரங்கசீப் ஆகியோர் போதை பொருளை பாரத் ஜெயின் என்பவரிடம் ஒப்படைக்க திட்டமிட்டிருந்தனர். மஹிபால்பூர் பகுதியில் உள்ள கிடங்கில் இருந்து வெளியேறி போதைப் பொருளை ஒப்படைக்கச் சென்றபோது அவர்கள் போலீசாரிடம் பிடிப்பட்டனர். துஷார் கோயல், ஹிமான்சு, அவுரங்கசீப் ஆகியோரிடம் இருந்து 15 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
டெல்லி சிறப்பு போலீஸ் பிரிவு 560 கிலோவுக்கு அதிகமான கோகோயினை பறிமுதல் செய்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள துஷார் கோயல் 40 வயதானவர். அவரது தந்தை ஒரு பதிப்பகம் நடத்தி வருகிறார். ஹிமான்சு அவருடைய கூட்டாளி ஆவார். இவர்களுக்கு ஓட்டுநராக அவுரங்கசீப் பணியாற்றி வந்தார். டெல்லிக்கு சாலை வழியாக கோகோயின் கடத்தி வரப்பட்டுள்ளது. மரிஜுவானா போதைப்பொருள் விமானம் வழியே கடத்தி வரப்பட்டுள்ளது. இந்த கடத்தல் கட்டமைப்பில் முக்கிய விநியோகிப்பாளராக துஷார் கோயல் திகழ்ந்துள்ளார்.
இதையும் படிங்க: ஜாபர் சாதிக்கின் சகோதரரிடம் இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை விசாரணை!
டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் இந்த கடத்தல் கும்பலை பிடிக்க இரண்டு மாதங்களுக்கும் மேலாக ரகசியமாக பணியாற்றி வந்தனர். பண்டிகைகால கொண்டாட்டங்களுக்கு முன்பாக இந்த கடத்தல் கும்பல் பிடிபட்டுள்ளது. நான்கு பேரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. தலைநகர் டெல்லிக்கு யார் போதைப்பொருளை கடத்தியது என்று கண்டுபிடித்துள்ளது. இந்த கடத்தலில் தொடர்புடையவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது," என்று கூறினார்.
துபாயில் இருந்து செயல்பட்ட கடத்தல் கும்பல்: மேலும் பேசிய பிரமோத் சிங் குஷ்வாகா, "கோகோயின் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவதில்லை. இது தென் அமெரிக்காவில் தயாரிக்கப்படுகிறது. 50 கிலோ கோகோயின் போதைப்பொருளை கடத்தியவர்களிடம் இருந்து வாங்கி உணவகங்கள் அல்லது விடுதிகளில் விநியோகிக்க திட்டமிடப்பட்டிருப்பது தெரியவந்தது. யாருக்கெல்லாம் போதைப்பொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. துபாயில் உள்ள நபரின் தலைமையில் இந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல் செயல்பட்டுள்ளது," என்று கூறினார்.
போதைப்பொருள் கடத்தல் கும்பல் மீது கடும் நடவடிக்கை: டெல்லியில் போதைப் பொருள் கடத்துவோர் மற்றும் விநியோகிப்போர் மீது ஆபரேஷன் கவாச் என்ற பெயரில் போலீசார் பல்வேறு கடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிதி ஆண்டில் ஆகஸ்ட் 31 வரை போதை மருந்துகள் மற்றும் மனநல மருந்து பொருட்கள் சட்டம், 1985ன் கீழ் .695 வழக்குகளில் போதைப் பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த 961 பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.