அகமதாபாத்: குஜராத் கடற்பகுதியில் சட்டவிரோத போதைப் பொருள் கடத்தல் குறித்து குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்து உள்ளது. இதையடுத்து கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்ட குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு, இந்திய கடலோர காவல் படையினர் அரேபிக் கடல் பகுதியில் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த படகு ஒன்றை வழிமறித்து பிடித்தனர்.
பாகிஸ்தான் படகில் இருந்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான 86 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், ஏறத்தாழ 14 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் பாதுகாப்பு படையினர் தகவல் தெரிவித்து உள்ளனர். பாகிஸ்தான் படகில் இருந்து கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் எந்த வகையிலானது என்பது குறித்து கடலோர காவல் படையினர் தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை.
போர்பந்தர் பகுதியில் பாகிஸ்தான் படகு பிடிபட்டதாகவும் எங்கிருந்து எங்கு போதைப் பொருள் கடத்தல் நடத்த திட்டமிடப்பட்டது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விடை அறிய பிடிபட்ட 14 பேரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் பாதுகாப்பு படையினர் தெரிவித்து உள்ளனர். முன்னதாக குஜராத்தில் ரகசியமாக இயங்கி வந்த போதைப் பொருள் உற்பத்தி ஆலையை கண்டுபிடித்த போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் ஏறத்தாழ பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் மற்றும் உற்பத்தி பொருட்களை கண்டறிந்தனர்.
இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்த பாஜக இஸ்லாமிய பிரிவு தலைவர் கைது! என்ன காரணம்? - Lok Sabha Election 2024