ஐதராபாத் : இந்தியாவில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இடையூறு ஏற்படுத்த சீனா, வட கொரியா திட்டமிட்டு உள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் எச்சரித்து உள்ளது. இந்தியா மட்டுமின்றி இந்த ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்கா, தென் கொரியா நாடுகளின் பொதுத் தேர்தலில் கூட செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி குளறுபடிகளை ஏற்படுத்த இரு நாடுகளும் முயன்று வருவதாக மைக்ரோசாப்ட் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக மைக்ரோசாப்ட் அச்சுறுத்தல் புலனாய்வு பிரிவு வெளியிட்டு உள்ள அறிக்கையில், இந்த ஆண்டு பொதுத் தேர்தல்கள் நடைபெற உள்ள நாடுகளில், செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழிழ்நுட்பத்தை சமூக வலைதளங்களில் பயன்படுத்தி இடையூறு ஏற்படுத்த சீனா திட்டமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தேர்தல்களை பாதிக்கக் கூடிய வகையிலான உள்ளடக்கங்களை வெளியிடவும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சோதனை அடிப்படையில் வீடியோ, ஆடியோ, மீம்ஸ் உள்ளிட்ட பதிவுகளை வெளியிடவும் சீனா முயன்று வருவதாகவும், எதிர்காலத்தில் இதை அதிகரிக்க உள்ளதாகவும் மைக்ரோசாப்ட் நிறுவனம் எச்சரித்து உள்ளது.
கந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தைவானில் நடந்த தேர்தலுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலான உள்ளடக்கங்களை சீனா பயன்படுத்தியதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்து உள்ளது. சீனா, வட கொரியா ஆதரவு பெற்ற சைபர் குழுக்கள் இந்த பணியில் ஈடுபட்டு உள்ளதாகவும், தைவானை தாண்டு மற்ற நாடுகளின் தேர்தல்களில் இடையூறு விளைவிப்பது நோக்கமாக கொண்டு இந்த குழுக்கள் இயங்கி வருவதாகவும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உலகம் முழுவதும் 64 நாடுகளில் இந்த ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தியாவில் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதேபோல் இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.
அதேபோல் தென் கொரியாவிலும் தேர்தல் நடைபெறுகிறது. குறிப்பாக சீனா ஆதரவு சைபர் குழுக்கள் இந்தியா, அமெரிக்கா, தென் கொரியா நாடுகளை குறிவைத்து உள்ளதாகவும் இதற்கு வடகொரியா ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு அச்சுறுத்தல் புலனாய்வு பிரிவு எச்சரித்து உள்ளது.
இதையும் படிங்க : உபா, பணமோசடி தடுப்பு சட்டங்கள் ரத்து - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேர்தல் அறிக்கை வெளியீடு! - CPIM Lok Sabha Poll Manifesto