பெய்ஜிங்: கிழக்கு லடாக் பகுதியில் இந்தியாவுடனான மோதல் விவகாரத்தில் தீர்வு எடப்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
2020ஆம் ஆண்டு ஜூன்15ஆம் தேதி இந்தோ-சீனா எல்லைப் பகுதியான கிழக்கு லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் இந்தியா - சீனா இராணுவத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்தியத் தரப்பில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக இந்திய பாதுகாப்புத் துறை தரப்பு கூறியது. இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டதில் எத்தனை வீரர்கள் உயிரிழந்தனர் என்ற விவரத்தை சீனா இதுவரை வெளியிடவில்லை.
இந்த விவகாரத்தைத் தொடர்ந்து இருநாட்டு ராணுவமும் கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் ராணுவத்தை குவித்தன. இந்திய-சீன எல்லையில் பதற்றமான சூழல் நிலவியது. இருநாடுகளுக்கு இடையே பதற்றத்தை தணிக்க வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்துறை ஆகியவற்றின் மூலம் இந்தியா நடவடிக்கை மேற்கொண்டது.
இதற்கிடையே, லடாக்கின் கிழக்கே உண்மையான எல்லை கட்டுப்பாடு கோடு அருகே ரோந்து மேற்கொள்வதில் சீனாவுடன் உடன்பாடு எட்டப்பட்டதாக மத்திய அரசு 21ஆம் தேதி தெரிவித்தது. இந்த நிலையில் இது குறித்து சீன தலைநகர் பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் லின் ஜியான், "சீனா-இந்தியா இடையே கடந்த சில ஆண்டுகளாக தூதரக ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் நெருக்கமான தகவல் பரிமாற்றங்கள் நடைபெற்றது. அதன் அடிப்படையில் இருதரப்பிலும் இது தொடர்பான விஷயங்களில் ஒரு தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இதனை அமல்படுத்துவது குறித்து இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவோம்," என்றார்.
இதனைத் தொடர்ந்து பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க சீனா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியுடன், சீன அதிபர் ஜி ஜின்பிங்க் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்