டார்ஜிலிங்: மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் அருகே இன்று (ஜூலை 31) சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரங்கபாணி அருகே கனிம எண்ணெய் ஏற்றிக்கொண்டு வந்த சரக்கு ரயிலின் நடுப்பகுதியில் உள்ள இரண்டு பெட்டிகள் திடீரென தடம் புறண்டுள்ளன.
இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ள ரயில்வே வட்டாரம், ரங்கபாணி அருகே உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்குள் நுழைவதற்கு முன்பு ரயில் தடம் புரண்டதாகவும், இதன் காரணமாக சிறிது நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளது. மேலும், ரயில் தடம் புரண்டதைத் தொடர்ந்து ரயில்வே பாதை ஆய்வுக்கு உட்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் கடந்த ஜூன் 17 அன்று இதே ரங்கபாணி பகுதியில்தான் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் சரக்கு ரயில் மீது மோதியதில் 10 பேர் உயிரிழந்தனர். பல பயணிகள் காயமடைந்தனர். அதேபோல, கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை ஜார்கண்ட் மாநிலம் சக்ரதர்பூர் அருகே ஹவுரா-மும்பை மெயிலின் 18 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இந்த நிலையில், ரங்கபாணியில் மீண்டும் சரக்கு ரயில் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தால் ரயில் பயணிகளுக்கு அச்சத்தை கொடுத்துள்ளது.
Another rail accident today, in the same Phansidewa/ Rangapani area in North Bengal, where there was a most tragic accident just six weeks back!
— Mamata Banerjee (@MamataOfficial) July 31, 2024
We are very concerned about what is happening!!
இதுகுறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எக்ஸ் தளத்தில், ''இன்று மற்றொரு ரயில் விபத்து நடந்துள்ளது. வடக்கு வங்காளத்தில் உள்ள அதே ரங்கபாணி பகுதியில், ஆறு வாரங்களுக்கு முன்புதான் மிகவும் சோகமான விபத்து நடந்தது. என்ன நடக்கிறது என்பதைப் பற்றி நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம்" என குறிப்பிட்டுள்ளார்.
சரக்கு ரயில் தடம் புரண்டதை குறித்து வடகிழக்கு ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி சப்யசாச்சி டே கூறுகையில், "சரக்கு ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாக அறிந்தேன். நிலைமையை சீரமைக்கும் பணி துவங்கியுள்ளது'' என்றார்.
இதையும் படிங்க: “இரண்டு முறை எச்சரிக்கை விடுத்தோம்..” - வயநாடு நிலச்சரிவு குறித்து அமித் ஷா மாநிலங்களவையில் பேச்சு!