ராஞ்சி (ஜார்கண்ட்): ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவரும், அம்மாநில முதலமைச்சருமான ஹேமந்த் சோரன், கடந்த ஜனவரி 31ஆம் தேதி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, ஹேமந்த் சோரன் அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராக செயல்பட்ட சம்பாய் சோரன் முதலமைச்சராக பதவி ஏற்க, ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து உரிமை கோரினார்.
ஆனால், ஆளுநர் சம்பாய் சோரனை பதவி ஏற்க அழைக்காமல் காலம் தாழ்த்தியதாக விமர்சனம் எழுந்த நிலையில், நேற்று இரவும் சம்பாய் சோரனை முதலமைச்சராக பதவி ஏற்க ஆளுநர் அழைத்ததாக ஆளுநரின் முதன்மைச் செயலாளர் அறிவித்தார். இந்நிலையில், ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பின்னர் சம்பாய் சோரன் இன்று முதலமைச்சராக பதவி ஏற்றார்.
அம்மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சராக பொறுப்பேற்ற சம்பாய் சோரனை கட்டித் தழுவி ஆளுநர் வாழ்த்து தெரிவித்தார். சம்பாய் சோரன் பதவி ஏற்பு குறித்து ஜேஎம்எம் கட்சி எம்பி மஹுவா மாஜி, “சம்பாய் சோரன் பதவி ஏற்றது எங்கள் கட்சிக்கு வெற்றியாகும். மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்கிற பாஜகவின் திட்டத்தை இது வீழ்த்தியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
சம்பாய் சோரன் ஜார்கண்ட் முக்தி மோர்சா கட்சித் தலைவரும், ஹேமந்த் சோரனின் தந்தையுமான ஷிபு சோரனின் விசுவாசி ஆவார். ஜார்கண்ட் மாநிலத்தை தனி மாநிலமாக்கக் கோரிய போராட்டத்தில் பங்காற்றியதால், சம்பாய் சோரனை அம்மாநில மக்கள் ஜார்கண்ட் டைகர் என அழைக்கின்றனர்.
சம்பாய் சோரன் மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க தீவிரமாக செயலாற்றுபவர் என கூறப்படுகிறது. சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக காணப்படும் சம்பாய் சோரன், சமூக வலைத்தளங்களில் மக்கள் கூறும் பிரச்சினைகளைக் கூட உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்க்கக் கூடியவர் என கூறப்படுகிறது. எளிய பின்னணி கொண்டவர் என்பதால், அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்படுகிறார்.
முன்னதாக ஹேமந்த் சோரன், அவரது மனைவி கல்பனா சோரனை முதலமைச்சராக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், ஹேமந்த் சோரனின் சகோதரரின் மனைவியும், ஜேஎம்எம் கட்சி எம்எல்ஏவுமான சீதா தேவி முதலமைச்சராக விரும்பியதாகவும் கூறப்படுகிறது. இதனால் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்பதற்காக, ஷிபு சோரனின் தீவிர விசுவாசியான சம்பாய் சோரன் முதலமைச்சராக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் களமிறங்கிய விஜய்.. கொள்கை, திட்டம் என்ன?