டெல்லி: எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. நாடு முழுவதும் தேசிய தேர்வு முகமை நடத்திய நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதையடுத்து நீட் தேர்வை மீண்டும் நடத்தக் கோரியும், முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை நடத்தவும் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தன. மேலும், நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடிகள் நிலவுவதால் மருத்துவ கலந்தாய்வுக்கு தடை விதிக்கக் கோரி பல்வேறு தரப்பினரும் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் மருத்துவ கலந்தாய்வுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது. மேலும் நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக பதில் அளிக்க தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியது. நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாளை முன்கூட்டியே விற்பனை செய்ததாக உத்தர பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நீட் நுழைவுத் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக காங்கிரஸ், இடதுசாரிகளின் மாணவர் அமைப்புகள் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தேசியத் தேர்வு முகமை தலைவர் சுபோத் குமார் சிங்கை அப்பதவியில் இருந்து நீக்கி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், அவருக்கு பதிலாக பிரதீப் சிங் கரோலாவுக்கு கூடுதல் பொறுப்பாக தேசியத் தேர்வு முகமைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் நீட், நெட் உள்ளிட்ட பொதுத் தேர்வுகளில் நிகழும் முறைகேடுகளைத் தடுக்க மத்திய அரசு ஒரு உயர்நிலைக் குழுவை இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் அமைத்துள்ளது.
தேர்வு நடைமுறையில் தேவைப்படும் சீர்திருத்தங்கள், தரவு பாதுகாப்பு நெறிமுறைகளை மேம்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், தேசிய தேர்வு முகமையின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்த பரிந்துரைகளை இந்த குழு வழங்கும் என்றும் 2 மாதங்களுக்குள் இது தொடர்பான அறிக்கையை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக தற்போது நீட் நுழைவுத் தேர்வு முறைகேடுகளை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து இளங்கலை நீட் முறைகேடு தொடர்பான விசாரணையை துவக்கி உள்ளது.
இதையும் படிங்க: தேசிய தேர்வு முகமை தலைவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்! புதிய தலைவர் நியமனம்! 7 பேர் கொண்ட குழு அமைப்பு! - NTA New Head