ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சி தலைநகரத்தில் உள்ள சுடியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ''எக்ஸ்ட்ரீம் பார்'' ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை 1 மணிக்கு பாருக்குள் புகுந்த மர்ம நபர்கள் டிஜே சந்தீப் என்கிற சாண்டியை சுட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த டிஜே ஆர்ட்டிஸ்ட் சாண்டியை பாரில் இருந்தவர்கள் மீட்டு ரிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சாண்டி இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து ராஞ்சி நகர டிஎஸ்பி வி. ராமன், சுடியா காவல் நிலைய போலீசாருடன் சம்பவம் நடந்த பாருக்கு வருகை தந்து விசாரணை நடத்தினார்.
மேலும், பாரில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தார். அதில், துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது பதிவாகியிருந்தது. தற்போது சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து சுடியா காவல் நிலைய அதிகாரி உமாசங்கர் கூறும்போது, கொலைக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை... இருப்பினும், மர்ம நபர்களுக்கும் டிஜே மற்றும் பார் ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து இந்த கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகம் உள்ளது என்றார்.
மேலும், இச்சம்பவம் குறித்து ஞாயிற்றுக்கிழமை இரவு பாரில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது, பாரில் மது அருந்திக் கொண்டிருந்த சில இளைஞர்கள் கும்பல், டி.ஜே.சந்தீப் மற்றும் பாரின் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.. அப்போது கைகலப்பு வரை சென்று பின்னர் அந்த இளைஞர்கள் சென்று விட்டனர்.. அதனை அடுத்து பார் மூடப்படும் நேரத்தில் மீண்டும் அந்த இளைஞர்கள் வந்து டிஜே சந்தீப்பின் மார்பு உட்பட சரமாரியாக சுட்டுவிட்டு தப்பி சென்றனர் என்று கூறினர்.
தற்போது இக்கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள சுடியா போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: கையே கருகி போச்சு.. பெண் மருத்துவர் உயிரை பறித்த லேப்டாப் சார்ஜர்.. சென்னையில் சோகம்