டெல்லி : கிரு நீர்மின் திட்ட ஊழல் வழக்கில் 30 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்ய பால் மாலிக் தொடர்புடையை இடங்களும் அடங்கும் எனக் கூறப்பட்டு உள்ளது. தான் விவசாயியின் மகன் இது போன்ற சோதனைகளை கண்டு பயப்பட மாட்டேன் என்றும் சத்திய பால் மாலிக் தெரிவித்து உள்ளார்.
சிபிஐயின் சோதனைகளை உறுதிப்படுத்தும் முன்னாள் ஆளுநர் சத்திய பால் மாலிக் தனது எக்ஸ் பக்கத்தில், கடந்த 3 அல்லது நான்கு நாட்களாக உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளேன், இருப்பினும், எனது சர்வாதிகார அரசின் அமைப்புகளால் சோதனையிடப்பட்டு உள்ளது.
மேலும் எனது ஓட்டுநர் மற்றும் உதவியாளர்கள் சோதனை என்கிற பெயரில் எந்த காரணமும் இன்றி துன்புறுத்தப்பட்டு உள்ளனர். நான் விவசாயியின் மகன், இது போன்ற சோதனைகளுக்கு ஒரு போது அஞ்ச மாட்டேன். நான் விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கிறேன் - சத்திய பால் மாலிக்" என்று பதிவிட்டு உள்ளார்.
டெல்லியில் ஆர்.கே. புரம் பகுதியில் உள்ள சத்திய பால் மாலிக்கின் வீட்டில் காலை முதலே சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு கிரு நீர் மின் திட்டத்தில் சிவில் பணிகளை மேற்கொள்ள 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை தனியார் நிறுவனத்திற்கு ஒதுக்கியதில் முறைகேடு நடைபெற்றதாக கூறி சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.
முன்னதாக, ஜம்மு, ஸ்ரீநகர், டெல்லி, மும்பை, நொய்டா, திருவனந்தபுரம், தார்பங்கா (பீகார்) உள்ளிட்ட 14 இடங்களில், தனியார் நிறுவனத்தின் தலைவர், நிர்வாக இயக்குநர், இயக்குநர் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் தொடர்புடையை இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : வீட்டில் வைத்து பிரசவம்: பரிதாபமாக பறிபோன தாய்-சேய் உயிர்! கேரளாவில் நடந்தது என்ன?