புதுடெல்லி: 2025-26 ரபி சந்தைப் பருவப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை அளிக்கவும்,கங்கை ஆற்றின் குறுக்கே புதிய ரயில் மற்றும் சாலைப் பாலம் அமைக்கவும் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதி செய்வதற்காக, 2025-26 சந்தைப் பருவத்திற்கான ரபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு உயர்த்தியுள்ளது. கடுகு குவிண்டாலுக்கு ரூ.300-ம், மசூர் பருப்பு குவிண்டாலுக்கு ரூ.275-ம் குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டுள்ளது. பருப்பு, கோதுமை, குங்குமப்பூ, பார்லி ஆகியவற்றின் விலை குவிண்டாலுக்கு முறையே ரூ.210, ரூ.150, ரூ.140, பார்லி ரூ.130 உயர்ந்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு
கோதுமைக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை ரூ. 2425 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கெனவே ரூ. 2275 ஆக இருந்தது. உற்பத்தி செலவை விட குறைந்தபட்சம் 1.5 மடங்கு அளவில் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்கும் மத்திய பட்ஜெட் 2018-19 அறிவிப்பின் அடிப்படையில் அமைந்துள்ளது.
#Cabinet approves the construction of the Varanasi-Pt. Deen Dayal Upadhyaya multitracking project, including a new rail-cum-road bridge across the Ganga River, connecting the northern, eastern, and western states
— PIB India (@PIB_India) October 16, 2024
The total estimated cost of the project is approximately ₹2,642… pic.twitter.com/CDz8DztQIn
கங்கை ஆற்றின் குறுக்கே புதிய ரயில் மற்றும் சாலைப் பாலம் அமைக்கும் திட்டம்: சுமார் ரூ.2,642 கோடி மதிப்பீட்டிலான ரயில்வே அமைச்சகத்தின் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் உத்தரபிரதேசத்தின் வாரணாசி மற்றும் சந்தெளலி மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின்படி கங்கை ஆற்றின் மீது ஒரு புதிய ரயில் மற்றும் சாலைப் பாலம் அமைக்கப்பட உள்ளது.
இந்திய ரயில்வேயின் முக்கிய மையமான வாரணாசி ரயில் நிலையம், முக்கிய மண்டலங்களை இணைக்கிறது. யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு நுழைவாயிலாக செயல்படுகிறது. பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு இன்றியமையாத தீன் தயாள் உபாத்யாயா சந்திப்பு பாதை, நிலக்கரி, சிமென்ட் மற்றும் உணவு தானியங்கள் போன்ற பொருட்களை கொண்டு செல்வதிலும்,வளர்ந்து வரும் சுற்றுலா மற்றும் தொழில்துறை தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் முக்கியப் பங்கு விகிக்கிறது.